மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

திட்டங்கள்: பொதுமக்களிடம் கருத்து கேட்கக் கூடாதா?

திட்டங்கள்: பொதுமக்களிடம் கருத்து கேட்கக் கூடாதா?

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமல் விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மூன்று இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 1ஆம் தேதி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் வேதாந்தாவுக்கு இரண்டு இடங்களிலும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு ஓர் இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சந்தித்துப் பேசியிருந்தார். தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஹர்ஷவர்தனிடம், கருப்பண்ணன் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

இதனைக் குறிப்பிட்டு நேற்று (அக்டோபர் 10) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தாவுக்கு, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள “பேனா மை” ஈரம் காய்வதற்குள், அதிமுக அரசு விடுத்துள்ள இந்தத் திடீர் கோரிக்கை உள்நோக்கத்துடன் கூடிய சுயநலம் கொண்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இதற்காகவே டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே உதவியது போல், அந்தக் குழுமத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கும் உதவுவதற்கான அதிமுக அரசின் முன்னோட்டமாக அமைந்துள்ளது” என்று சந்தேகம் எழுப்பியுள்ள ஸ்டாலின்,

மக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என்று அந்தக் கோரிக்கை மனுவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“ஏனென்றால் அரசியல் கட்சிகளோ, அரசு சாரா அமைப்புகளோ எந்தக் காலத்திலும் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயமாக எதிரானவை அல்ல” என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், அதிமுக அரசும், அதன் அமைச்சர்களும் மக்களுக்கு எதிரான திட்டங்களை, கருத்துக் கேட்காமலேயே செயல்படுத்துவோம் என்ற எதேச்சதிகார மனப்பான்மையில் செயல்படுவது, ஆணவத்தின் உச்சகட்டம். ஆகவே, மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை அதிமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஜனநாயக ரீதியாக மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்த கண்டிப்பாக முன் வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon