மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சிம்பு கதையில் நடித்த தனுஷ்

சிம்பு கதையில் நடித்த தனுஷ்

வடசென்னை திரைப்படத்தின் கதையை நடிகர் சிம்புவுக்காக வெற்றி மாறன் எழுதியதாகவும் பின்னர் தான் அதில் நடித்ததாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் படக் குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

வடசென்னை படத்தின் பணிகள் ஆரம்பமானதை விவரித்த தனுஷ், “வடசென்னை கதையை வெற்றிமாறன் தயார் செய்ய ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகிறது. 2013ஆம் ஆண்டு இந்தக் கதையை பண்ண முயற்சி செய்தார். அதேநேரம் இந்தக் கதையை எடுக்கச் சரியான நேரம் இது அல்ல என்று எங்களுக்குத் தோன்றியது. காரணம், எங்களுக்கு அப்போது சரியான மார்க்கெட் இல்லை. வடசென்னை பெரிய கதை. அதைச் செய்ய நிறைய கால அவகாசமும், பொருளாதாரமும் வேண்டும். அதனால் அந்தக் கதையை தள்ளிவைத்து விட்டு நாங்கள் ‘ஆடுகளம்’ பண்ணினோம். அப்புறம் ஒரு பிரேக் எடுத்து வேலை செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்து நாங்கள் வேறு வேறு படங்களை செய்ய ஆரம்பித்தோம்” என்றார்.

வடசென்னை கதையில் சிம்பு உள்ளே வருவதற்கான சூழல் நிலவியது குறித்து கூறிய அவர், “ஒரு நாள் வெற்றிமாறன் எனக்கு போன் செய்து, வடசென்னை கதையை நான் சிம்புவை வைத்துப் பண்ணலாம் என்று இருக்கிறேன். இப்போது ‘வடசென்னை’ படத்தில் நான் செய்திருக்கிற அன்பு கேரக்டரை சிம்பு செய்வதாகவும், படத்தில் வருகிற குமார் என்ற பவர்ஃபுல்லான கேரக்டரில் என்னை நடிக்க வைப்பதாகவும் கூறினார் வெற்றி மாறன். அப்போது நான் வெற்றி மாறனிடம் சொன்னேன், ‘சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கிறது. ஆனால், அவளோ பெரிய பெருந்தன்மை எல்லாம் இல்லை! தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்றார்.

“அதன் பின் நான் வேறு படங்களில் பிசியாகி விட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது மறுபடியும் வெற்றி மாறன் போன் செய்து, ‘சில காரணங்களால் சிம்புவை வைத்து வடசென்னை படத்தைத் தொடங்க முடியவில்லை. அதனால் நாமே செய்வோம், உங்களுக்குச் சம்மதமா?' என்று கேட்டார்; சம்மதம் என்றேன். ஆனால், சிம்புவுக்கு சொன்ன கதையில் உடனே நான் நடிக்க முடிவெடுத்தால் அது தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கும் என்று என்று வடசென்னை படத்தை மீண்டும் தள்ளி வைத்தோம். அதற்குப் பிறகு வெற்றி மாறன் விசாரணை படத்தை இயக்கினார். நானும் வேறு சில படங்களில் நடித்தேன். அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நானும், வெற்றி மாறனும் வடசென்னையைத் தொடங்கினோம். இப்போது படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இதைச் சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை” என்று வடசென்னை உருவான கதையை தனுஷ் விவரித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ், வெற்றி மாறன் கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணைந்து புதிய படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon