மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய இந்திய அமெரிக்கர்!

ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய இந்திய அமெரிக்கர்!

இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலி தனது ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்கா அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் இந்திய அமெரிக்கரான ஹேலி (46) ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெற்ற பெண்களுள் இவரும் ஒருவர். இந்திய - அமெரிக்க உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட இவர் செவ்வாய்க்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் வழங்கினார். நிக்கியின் ராஜினாமாவை அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிவரை நிக்கி பதவியில் தொடர்வார். அதன் பின்னர் புதிய நபரை செனட் நியமிக்கும்.

தனது ராஜினாமாவுக்கான காரணங்களை ஹேலி இன்னும் தெரிவிக்கவில்லை. “பொதுச்சேவையில் ஆறு ஆண்டுகள், தென் கரோலினா மாகாணத்தின் ஆளுநராக இருந்தது என மொத்தம் எட்டு வருடங்கள் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஆதலால் எனக்கு ஓய்வு தேவை” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

சீக்கியர் குடும்பத்தில் பிறந்த இவர் பின்னாளில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவின் செனடரை ஆதரித்தார் ஹேலி. ட்ரம்பின் வார்த்தைகள் உலகப் போருக்கு வித்திடும் போன்ற அடுக்கடுக்கான விமர்சனங்களையும் ட்ரம்பின் மேல் வைத்த ஹேலி, பின் தனது ஆதரவை ட்ரம்புக்கு வழங்கினார்.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹேலி போட்டியிடுவார் என்று அமெரிக்க ஊடகங்களால் பேசப்பட்ட நேரத்தில், வரும் அதிபர் தேர்தலிலும் ட்ரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon