மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் நம்பிக்கை!

முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் நம்பிக்கை!

ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்ற வர்த்தகக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “உலகம் முழுவதும் பரவி வரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியானது, சமமான வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் புதிய கருவிகள், நடைமுறைகள், வளங்கள், சேவைகள், தயாரிப்புகள், திறன் மற்றும் சமீபத்திய தொழில் நுட்பங்களைச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடைய வழிவகுக்கிறது.

இதன்மூலம் அதிக வேலைவாய்ப்பு உருவாக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், குடிமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குதல், நேரத்தையும், ஆற்றலையும் சேமித்து மக்களின் வாழ்க்கையை மிகவும் எளியதாக்குதல் போன்றவற்றை தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது.

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று கூறுகின்ற வகையில் பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளைச் சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் சென்னையில் தொடங்க விரும்புகின்றன. நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவுக்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

தற்போது அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியும், திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னையிலுள்ள டைடல் பார்க்கில் 90 இருக்கைகள் வசதி கொண்ட தொழில்முனைவோர் மையத்தை அமைத்துள்ளது. 50 இருக்கைகள் வசதி கொண்ட ஒரு தொழில்முனைவோர் மையம் கோயம்புத்தூரில் நிறுவப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட, ஏற்கெனவே உள்ள உகந்த சூழ்நிலையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் பெறுவதற்கு ‚ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு‛ ஒன்று அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 11 அரசுத் துறைகளிலிருந்து தேவையான பல்வேறு அனுமதிகள் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை தொழில் நிறுவனங்கள் எளிதாகப் பெற இயலும். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வரும் ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகும் என்பது உறுதி.

பெங்களூருவைச் சேர்ந்த பொது விவகாரங்கள் மையம், இந்தியாவிலேயே ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு திறமையான மற்றும் வலிமையான ஆட்சி நடைபெறுவதால்தான் இத்தகைய சாதனைகளை செய்ய இயல்கிறது என்பதை இங்கே அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறினார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon