மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஒடிசாவைக் கடக்கும் புயல்: மீட்புப் படையினர் தயார்!

ஒடிசாவைக் கடக்கும் புயல்: மீட்புப் படையினர் தயார்!

டிட்லி புயல் இன்று ஒடிசாவைக் கடக்கும் என்பதால், அம்மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால், ஒடிசாவுக்கு 14 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், ஆந்திராவுக்கு நான்கு பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கு டிட்லி என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, கடந்த 9ஆம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிட்லி புயலானது இன்று (அக்டோபர் 11) ஒடிசா – ஆந்திரப் பிரதேசக் கடற்கரைப் பகுதியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் வெள்ளிக்கிழமை வரை வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று டிட்லி புயல் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டணம் பகுதியைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளார் புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஹெச்.ஆர்.பிஸ்வாஸ். தெற்கு ஒடிசாவைக் கடக்கும்போது டிட்லி புயல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசும் என்றும், 75 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, ஒடிசா மாநிலத்திலுள்ள கரையோர மாவட்ட ஆட்சியர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் நவீன் பட்நாயக். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணிகள், அம்மாநிலத்தில் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிட்லி புயல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் வகையில், ஒடிசா மாநிலத்துக்கு 14 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், ஆந்திராவுக்கு நான்கு மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. புயலையொட்டி அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஒடிசா மாநில உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் எஸ்.என்.பட்ரோ. இதன் தொடர்ச்சியாக, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையை உயர்த்தக் கூடாது என்று ஒடிசா வணிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டிட்லி புயலானது மிகக் கடுமையானது என்று கருத்து தெரிவித்துள்ளார் ஒடிசா மாநிலத் தலைமைச் செயலாளர் ஆதித்ய பிரசாத். புயல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon