மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புப் பார்வை: பாலியல் வன்முறையை எதிர்த்தவர்களுக்குப் பரிசு!

சிறப்புப் பார்வை: பாலியல் வன்முறையை எதிர்த்தவர்களுக்குப் பரிசு!

சேது ராமலிங்கம்

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள்: ஒரு பார்வை

நோபல் பரிசு மனிதகுலத்தின் நலனுக்காக மருந்துகள், தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு. 2016-17ஆம் ஆண்டுகளுக்கான நோபல் பரிசுகள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

மருத்துவம் அல்லது உடல்கூறு இயல் துறை சார்ந்த நோபல் பரிசு ஜேம்ஸ் ஆல்சன் மற்றும் தாஸ்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் எதிர்ப்பு சக்திக்கு எதிரானவற்றை தணிப்பதற்கான சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக வழங்கப்படுகிறது.

இயற்பியலில் ஆர்தர் ஆஸ்கினுக்கும் ஜெரார்டு மவுரூ மற்றும் டோனா ஸ்ட்ரிக்லேன்ட் ஆகிய மூவரும் வழங்கப்படுகிறது. இவர்கள் மூவரும் லேசர் இயற்பியல் துறையில் புதியவற்றைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.

வேதியியலில் பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் பி.ஸமித் மற்றும் சர் கிரிகோரி பி.வின்டர் ஆகியோருக்கு என்சைம்ஸ் குறித்த ஆய்வுகளுக்காக முன்னவருக்கும் உடலில் தோன்றும் எதிர்க் கூறுகள் (ஆன்ட்டி பாடிகள்) குறித்த கண்டறிதலுக்காகப் பின்னவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி.நோர்டஸ்க்கும் பால் எம்.ரோமருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னவருக்குக் காலநிலை மாற்றத்துடன் நீண்ட கால நுண் பொருளாதாரப் பகுப்பாய்வை இணைத்ததற்கும் பின்னவருக்கு நீண்ட கால நோக்கில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நுண் பொருளாதார பகுப்பாய்வுகளுடன் இணைத்ததற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறையே கருவியாக...

மேலே கண்ட பரிசுகளைத் தாண்டி, போர்க்களத்திலும் பயங்கரவாதிகள் மத்தியிலும் பணிபுரிந்தவர்களுக்கு வழங்கியது மிகவும் வித்தியாசமான முறையாகும். தலிபான்களின் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய மலாலாவுக்கு அடுத்தபடியாக இந்தப் பரிசு பாலியல் வன்முறைக்கெதிராகப் போராடியதற்காக வழங்கப்படுகிறது. இப்பரிசு, அமைதிக்காகப் பாடுபட்டவர்கள் என்ற வகைப்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

போரிலும் பயங்கரவாதச் செயல்களிலும் பாலியல் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு முற்றுபுள்ளி வைக்கக் களத்தில் நின்று போராடிய இருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் மகப்பேறு மருத்துவரும் அறுவை சிகிச்சையாளருமான டெனிஸ் முக்வேஜி. இன்னொருவர்தான் மிகவும் முக்கியமானவர். அவர் பெயர் நாதியா முராத். இவரின் கதை மிகவும் சோகமானது. அனுபவித்த வேதனைகளோ பயங்கரமானவை. இவர் ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்டு, அவர்களால் செக்ஸ் அடிமையாக நடத்தப்பட்டு அதிலிருந்து தனது துணிச்சலால் மீண்டு வந்தவர்.

சிதைக்கப்பட்ட உடல்களுக்கு மருத்துவம்

காங்கோவிலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராகப் பாலியல் வல்லுறவையையும் வன்முறையையும் ஆயுதமாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பெண்களின் உடலையும் மனதையும் சிதைத்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர்தான் டெனிஸ் முக்வேஜி

பாலியல் வன்முறையைப் போருக்கான ஓர் ஆயுதமாக மாற்றுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தனது துணிச்சலான அதே சமயம் பயங்கரமான அனுபவங்கள் மூலம் உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முராத். உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகள் மற்றும் போர் வெறியர்களான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் செக்ஸ் அடிமையாக்கப்பட்டு அனைத்து துன்பங்களையும் அனுபவித்து மீண்டுவந்தவர் முராத்.

ஈராக் நாட்டில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவர்தான் முராத். 2015 இல் அவரின் கிராமத்தில் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், முராத் உள்ளிட்ட பல இளம் பெண்களையும் சிறுமிகளையும் பிடித்துச் சென்றனர். அந்தத் தீவிரவாதிகளால் அவர்கள் செக்ஸ் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

நாள் முழுவதும் அடி உதை சித்ரவதைகள். இரவு முழுவதும் நினைத்துப் பார்க்க முடியாத பாலியல் சித்ரவதைகள். அந்தச் சித்ரவதைகள் நடைபெறும்போது முராத் எப்போதும் மயக்க நிலையிலேயே இருப்பார். ரத்தம் ஆறாக அவரின் பிறப்புறுப்பிலிருந்தும் மார்பிலிருந்தும் ஓடிக்கொண்டிருக்கும். இரவில் இவர் உடலின் மீது வெறியாட்டம் ஆடியவர்களுக்குக் காலையில் இவர்தான் பணிவிடை செய்ய வேண்டும்.

மூன்று மாதங்களாக செக்ஸ் அடிமையாக இருந்த முராத் ஒரு வழியாக அங்கிருந்து தப்பி ஜெர்மனிக்குச் சென்று மீண்டும் அங்கிருந்து ஐநாவுக்கே சென்று, தான் அனுபவித்த பயங்கரமான அனுபவங்களை அப்படியே அங்கே கொட்டினார். அதைக் கேட்டு ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலின் அவையிலிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் நடத்திய விதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அந்தப் பயங்கரவாத அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போதே அவரின் துணிச்சலைப் பாராட்டி அவர் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பணி புரிந்துவருகிறார். டெனிஸ் முக்வேஜியும் முராத்தும் தங்களது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்துப் போர்க் குற்றங்களை எதிர்த்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடுவதில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் ரெய்ஸ் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.

குற்ற உணர்வின் பிராயசித்தமாக நோபல்

நோபல் பரிசு பெற்றவர்கள் உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்பட்டு பிரபலமாகிறார்கள். அவ்வளவு மகத்துவம் வாய்ந்த நோபல் பரிசை வழங்குபவர் யார் தெரியுமா?

பௌதீகவியலாளரும் வேதியியலாளருமான ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895இல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் மூலம் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முதல் நோபல் பரிசு 1901இல் வழங்கப்பட்டது. வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஆறு துறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையை உருவாக்கியவர் ஒரு மிகப்பெரிய வெடி மருந்து வியாபாரி என்பதும் நோபல் அறக்கட்டளை உருவான விதமும் பலருக்குத் தெரியாது.

நோபல் 1894இல் ஓர் இரும்புத் தொழிற்சாலையை வாங்கினார். அதில் பெரும் லாபம் கண்ட பின்னர் வெடி மருந்துகளைக் கண்டுபிடித்து அவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கினார். முதன்முதலில் பாலிஸ்ட்டிக் என்ற வெடி மருந்துக்கு அடிப்படையான மருந்தைக் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து டைனமைட் என்ற வெடிகுண்டையும் கண்டுபிடித்தார். இதனால் உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு வெடி மருந்துகளையும் வெடி குண்டுகளையும் வாங்கியதால் நோபலிடம் பெரும் செல்வம் குவிந்தது.

நோபல் செல்வத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது ஒரு பிரெஞ்சு செய்தி நாளேடு இவரின் வாழ்க்கையையே மாற்றியது. அந்த நாளேட்டில் இவரின் பெயரைக் குறிப்பிட்டு ‘மரண வியாபாரியின் இறப்பு’ என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியானது நோபலை அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையில் இறந்தது அவரின் சகோதரர். நாளேடு தவறாக அவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தது. தான் இறந்த பின்னர் தனக்கு இப்படிப்பட்ட வரலாறு எழுதுவார்கள் என்பதால் மனம் வருந்திய அவர் வெடி மருந்துகளைத் தயாரித்ததற்காகக் குற்ற உணர்வுக்கு உள்ளானார். அதற்குப் பிராயச்சித்தமாகத் தனது பெயரில் நோபல் அறக்கட்டளையை உருவாக்கினார். அனைத்துச் சொத்துகளையும் அறக்கட்டளைக்கு மாற்றினார். அந்த அறக்கட்டளையின் பேரில்தான் நோபல் விருது வழங்கப்பட்டு வருகிறது. மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இயற்பியலுக்கும் வேதியியலுக்குமான நோபல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. பொருளாதாரத்திற்கு ஸ்வேரிஜெஸ் ரிக்பேங்க். உடல் கூறு இயல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு கரோலின்ஸ்கா நிறுவனம். இலக்கியத்திற்கு ஸ்வீடிஷ் அகாடமி, அமைதிக்கு நார்வேயின் நோபல் கமிட்டி என்று பல்வேறு அமைப்புகளின் சார்பாக இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1901இலிருந்து 2017வரை 585 முறை 923 நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிலர் ஒரு முறைக்கு மேல் பெற்றுள்ளனர். இந்தக் கணக்கின்படி மொத்தம் 892 தனி நபர்களுக்கும் 24 அமைப்புகளுக்கும் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon