மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

தாமிரபரணி புஷ்கர விழாவில் 3,000 போலீசார்!

தாமிரபரணி புஷ்கர விழாவில் 3,000 போலீசார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா புஷ்கர விழா தாமிரபரணி நதியின் படித்துறைகளில் இன்று (அக்டோபர் 11) தொடங்குகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை புஷ்கர விழா நடைபெறுகிறது. இந்த புஷ்கர விழாவில் மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், பக்தர்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமிரபரணி புஷ்கர விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,நேற்று (அக்டோபர் 10) நடைபெற்றது. “தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (இன்று) தொடங்கி 13 நாள்கள் வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி உள்ளிட்ட29 படித்துறைப் பகுதிகளில் உள்ள எந்தப் படித்துறையிலும் பக்தர்கள் புனித நீராடலாம். இதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பான முறையில் புனித நீராடுவதற்கு அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பாதுகாப்புப் பணியில், மூன்று எஸ்பிக்கள் தலைமையில், ஐந்து ஏடிஎஸ்பிக்கள், 16 டிஎஸ்பிக்கள் உட்பட 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இது தவிர, சிறப்புப் பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய மீட்புப் படையினரும், மீன்வளத் துறையிலிருந்து 24 படகுகளும், தீயணைப்புத் துறை மூலம் மூன்று படகுகளும் மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon