மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

நீலகிரி: ரயில் கட்டணம் உயர்வு!

நீலகிரி: ரயில் கட்டணம் உயர்வு!

யுனெஸ்கோவால் உலக பாரம்பரியத் தலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயிலானது உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது. இதன் கட்டணம் அதிரடியாகப் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகைக்கும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கும் இடையே சுமார் 23 கிமீ தொலைவுக்குப் பல் சக்கரம் அமைக்கப்பட்ட பாதையில் 13 கிமீ வேகத்தில் மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாவாசிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். உதகையிலிருந்து குன்னூர் வரை ஐந்து பெட்டிகளுடன் டீசல் என்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நான்கு பெட்டிகளுடன் நீராவி என்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது.

உதகையில் இருந்து லவ்டேல், கேத்தி, குன்னூர் வரை முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு மலை ரயில் கட்டணம் ரூ.10 ஆகவும், முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் ரூ. 25 ஆகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத கட்டணம் ரூ. 25 ஆகவும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலை ரயிலால் இழப்பு

2016-2017ஆம் ஆண்டில் இந்த மலை ரயிலால் ரூ.26.74 கோடி செலவு ஏற்பட்டுள்ளது என்றும், ரூ.1.99 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகக் கிடைத்துள்ளது என்றும் ரயில்வே அமைச்சர் மனோஜ் சின்ஹா கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தொடரில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். இந்திய ரயில்வே துறைக்கு இந்த மலை ரயிலால் இழப்பு ஏற்பட்டபோதும், பாரம்பரிய ரயில் சேவையின் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.

கட்டண உயர்வு விவரம்:

உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை

முதல் வகுப்புக் கட்டணம் 195 ரூபாயிலிருந்து 395 ரூபாயாக உயர்வு.

இரண்டாம் வகுப்பு முன்பதிவுக் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 130 ரூபாயாக உயர்வு.

முன்பதிவற்ற இரண்டாம் வகுப்புக் கட்டணம் 15 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்வு.

குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை

முதல் வகுப்புக் கட்டணம் 174‌ ரூபாயிலிருந்து 295 ரூபாயாக உயர்வு.

இரண்டாம் வ‌குப்பு முன்பதிவுக் கட்டணம் 25 ரூபாயிலிருந்து ‌85 ரூபாயாக உயர்வு.

இரண்டாம் வகுப்பு முன்பதிவற்றக் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 45 ரூபாயாக உயர்வு.

அக்டோபர் மாதம் 8ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பெருமழை பெய்ததன் காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் நேற்று முதல் அந்தச் சேவை தொடங்கியுள்ளது.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon