மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

சிறப்புத் தொடர்: சென்னையின் செழிப்பு சீரழிந்தது எப்படி?

சிறப்புத் தொடர்: சென்னையின் செழிப்பு சீரழிந்தது எப்படி?

நரேஷ்

ஊர் என்ற அளவில் சென்னை செழிப்பாகத்தான் இருந்தது. நகரம் என்று நகர்ந்துதான் நாசமானது. சென்னையின் நீர் வடிகால்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சென்னையில் இருப்பது போன்ற ஒரு 'Water drainage system' இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லை.

இயற்கையாகவே சென்னைக்கு இருக்கும் வடிகால் வசதிகளும், நீர்நிலைகளும் நிகரற்றவை. வடசென்னைக்குக் கொற்றலை, நடுசென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு. இவைபோக, பாலாறு மற்றும் பல்வேறு நீர்நிலைகள் என்று அழகாக வகுத்தளித்து வாழ வைத்தது இயற்கை. 1906ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 474 நீர்நிலைகளைப் பெற்றிருந்தது இந்நகரம். அதுவும் 1906ஆம் ஆண்டின் சென்னை என்பது, இப்போதைய சென்னையைவிட மிகவும் சிறியது. தற்போது சென்னையின் எல்லை நீண்டு செங்கல்பட்டு வரை சென்றுவிட்டது. அப்படிப் பார்த்தால், தற்போதைய சென்னையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 659 நீர்நிலைகள் இருந்ததாகத் தெரிவிக்கிறது கணக்கெடுப்பு.

பெயர்கள் சொல்லும் கதைகள்

இன்று எண்ணிப்பார்த்தால் 27 நீர்நிலைகள்தான் எஞ்சியிருக்கின்றன. பெயரிலேயே நீர்நிலைகளைக் கொண்ட சென்னையின் ஊர்கள், மறைந்த நீர்நிலைகளின் மறையாத சாட்சியாக மறைந்து நிற்கின்றன. ’தாங்கல்’, ‘பாக்கம்’, ‘வாக்கம்’, ’ஓடை’, ’ஏரி’ என்று கடைமொழிகளைக் கொண்ட ஊர்கள் யாவுமே நீர்நிலைகள்தான் என்பது நாம் யாவரும் அறிந்ததே. ஐயப்பன்தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல், மேடவாக்கம், வில்லிவாக்கம், முகலிவாக்கம், கோடம்பாக்கம், துரைப்பாக்கம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, பொத்தேரி, ஓட்டேரி என்று பேருந்துகளிலும் பெயர் பலகைகளிலுமே மீதமிருக்கின்றன நீர் ‘ஆதாரங்கள்’.

பெருங்களத்தூர் என்றால், அது பெருங்குளத்தைத் தன்னகத்தே கொண்ட ஊர் என்பதை விளக்க நமக்குச் சான்று தேவையா என்ன? அடையாறு என்பதே ஆற்றின் பெயருடைய ஊர் தானே. அல்லிக்குளம் வணிக வளாகம் என்பது அல்லிகுளத்தை அழித்துக் கட்டமைக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

இவ்வாறாக நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது பற்றி மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லாதபோது, யார் எதிர்க்கப் போகிறார்கள்? எனக்கு வீடு கட்ட இடம் கிடைத்தால் போதும், வீடு கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கும்வரை அரசாங்கத்துக்கு என்ன தடை? சென்னையின் மிக முக்கியமான அரசு அலுவலகங்களே நீர்நிலைகளின் சமாதியில் எழுப்பப்பட்டவைதான்.

நீங்கள் இந்த நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்து வழக்குத் தொடுக்க வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு செல்வீர்களேயானால், உங்களுக்கு ஒரு செய்தி. எழும்பூர் நீதிமன்றம் எழுப்பப்பட்டதே நீர்நிலையை ஆக்கிரமித்துதான்.

1893ஆம் ஆண்டு 12.6 சதுர கிமீ என்ற அளவில் இருந்த சென்னை நீர்நிலைகளின் பரப்பளவானது 2017ஆம் ஆண்டுவாக்கில் மிக மோசமாக அழிக்கப்பட்டு 3.2 சதுர கிமீ என்று குறைந்துவிட்டது. மேலே கொடுக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படத்தைப் பாருங்கள். சென்னையின் நீர்நிலைகள் குறிப்பிட்ட கால அளவில் மிகப் பெரிய பரப்பளவு பறிக்கப்பட்டுள்ளது தெரியும்.

தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான கழிமுக பகுதிகளின் அருகிலுள்ள சதுப்பு நிலம் பள்ளிக்கரணை. பள்ளிக்கரணையின் பரப்பளவில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை பற்றிய மிக சுவாரஸ்யமான செய்தி ஒன்று உண்டு. 1980களில் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர், பள்ளிக்கரணை குறித்து ஆய்வு நடத்தி ஆச்சரியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அவ்வறிக்கையின் வாசகங்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இன்றும் உறங்கிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு வறட்சி வந்தாலும் சென்னைக்குத் தேவையான தண்ணீரை வழங்கும் திறன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு இருக்கிறது. பள்ளிக்கரணை கால்வாய்களில் இருந்து வெளியேறிய நீர் மட்டுமே முழு வேளச்சேரியையும் மூழ்கடித்தது என்றால், பள்ளிக்கரணையின் நன்னீர் கொள்ளளவை நினைத்துப் பாருங்கள்! சதுப்பு நிலங்கள் தன்மையே நீர் சேமிப்புக் கிடங்குபோல செயல்படுவதுதான். மழைக் காலங்களில் நிலத்தடியில் நீரைச் சேமித்து வைப்பதும், வறட்சிக் காலங்களில் சேமித்த நீரை வெளிப்படுத்துவதும்தான் அவற்றின் வேலை. வெறும் மூன்று ஏரிகள் முழுமையாக நிறைந்தால் நவீன சென்னையின் ஒரு வருடத் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்றால், இவற்றில் நீரை நிரப்புவதைத் தவிர வேறென்ன சிறப்பான கட்டமைப்பை உருவாக்க முடியும்?

பல நூறு நீர்நிலைகள், மூன்று முக்கிய ஆறுகள், பல்வேறு கிளை ஆறுகள், மிகப் பெரிய சதுப்பு நிலம், இயற்கையான வடிகால் வடிவமைப்பு, விவசாய நிலம், கடல் வளம், வணிக வாணிபம், துறைமுகம், கழிமுகம், புவியியல் அமைப்பு, சீரான பருவ நிலை என்று சீரும் சிறப்புமாக இருக்கிறது சிங்கார நகரம். உண்மையில் சென்னைக்கு நாமாகச் செய்ய வேண்டியவை, இந்த இயற்கைக் கட்டமைப்பை எதுவும் செய்யாமல் இருப்பதுதான்.

எனவே, சென்னைக்காகப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட வரத்தை மீட்டெடுப்பதுதான் நம் வேலை! இதைவிடச் சுலபமான வழியை நவீனம் நமக்குக் காட்டாது. இப்போதும் இயற்கை நம்மை வாரியணைக்கக் காத்திருக்கிறது. நமது வாழ்வுக்கான அனைத்து அமைப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சென்னையை மீட்டெடுப்பது பெரிய வேலையில்லை. மனித மனங்களை நுகர்வின் பிடியில் இருந்தும், பொருளாதாரப் பேராசையின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதுதான் நம் முக்கியமான வேலை. சென்னைக்காகச் சேர்ந்து செயல்படுவோம்!

(சென்னைக்கான தீர்வுத் தேடல் நாளை மறுநாள் தொடரும்…)

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon