மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சந்தை: ‘ஹலோ கூகிள்’ PIXEL 3 மாடல்களை வாங்கலாமா?

சந்தை: ‘ஹலோ கூகிள்’ PIXEL 3 மாடல்களை வாங்கலாமா?

சிவா

எக்கச்சக்கமான ஸ்மார்ட்ஃபோன்கள் மாதந்தோறும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பல பத்தாயிரங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பதையே தங்களது கௌரவமாக நினைக்கும் நிலையில், புதிதாக களத்துக்கு வந்த கூகிள் மட்டும் அமைதியாக இருந்துவிடுமா. இதோ அறுபதாயிரத்துக்கும் மேலான விலையில் தனது இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை ரிலீஸ் செய்திருக்கிறது. அவற்றின் பெயர் PIXEL 3 மற்றும் PIXEL 3 XL. தற்போது ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் இரண்டு மாடல்களும், அதற்கு முந்தய தலைமுறைகளான பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL அகியவற்றிலிருந்து எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

உண்மையாகவே ஸ்மார்ட் மூவ் தானா?

அதிவேக செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை உருவாக்கும் போட்டி நிறுவனங்கள் அதிகமாக களத்தில் இருக்கும்போது, சாஃப்ட்வேர் நிறுவனமான கூகிள் ஏன் இந்தத் தொழிலுக்கு வரவேண்டும் என்று கேட்கப்பட்டது. கூகிள் நிலைக்காது என்று கூறப்பட்டது. இப்படியான அனைத்து அனுமானங்களையும், தன்னை எதில் வல்லவர் என்று சொன்னார்களோ; தன்னால் எதில் மட்டுமே வெற்றிபெற முடியும் என உலகம் நம்பியதோ, அதை மட்டுமே வைத்து கூகிள் வெற்றிபெற்றது. மிகவும் சாதாரணமாக வென்றது. ஹார்டுவேர்களின் மூலம் மற்ற ஸ்மார்ட் மொபைல்கள் செய்தவற்றை, சாஃப்ட்வேர் உதவிகொண்டு தானாகவே செய்தன பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்கள். அதன் அபரிமிதமான வளர்ச்சியை பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்ஃபோன்களில் காண முடிகிறது.

ஸ்மார்ட் எப்படி?

உதாரணமாக, இதில் பயன்படுத்தியிருக்கும் கேமராவை எடுத்துக்கொள்வோம். இரண்டு 12 மெகாபிக்சல் கேமராக்கள் பொருந்திய இவற்றில், இரண்டுமே Widescreen கேமராக்களாகப் பயன்படுத்திக்கொள்பவைதான். ஆனால், அவற்றை எப்போது WideScreen கேமராவாக வேண்டுமோ அப்போது மற்றும் தேவையான அளவு Screen அளவை மாற்றிக்கொள்ளும் வகையில் ஒரு அட்ஜசர் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஃபோட்டோக்கள் எடுக்கப்படும்போதே அவற்றை சிறந்த ஃபோட்டோக்களாக மாற்றுவதற்கு AI(Artificial Intelligence) புரோகிராமை பயன்படுத்துகின்றன இவை. முன்பக்க கேமராக்களில் பிக்சல் 3 மட்டும் சிறு மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இடது ஓரமாக அதனை மாற்றியிருக்கின்றனர். இது பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஆகிய மாடல்களில் 5 மற்றும் 6 இஞ்ச் அளவில் இருந்த ஸ்கிரீன் அளவை, 5.3 மற்றும் 6.3 இஞ்ச் அளவுக்கு மாற்ற எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால், தற்போது வெளியாகும் அதிநவீன மொபைல்களில் இருப்பது போல Facial recognition வசதி இரண்டு மாடல்களிலும் இல்லை. மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் இடம்பெற்றுள்ள அந்த வசதியின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தினால் கூகிள் இதனைக் கைவிட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா?

எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

ஸ்மார்ட்ஃபோன் அன்லாக் செய்து உள்ளே நுழையும் அத்தனை பாஸ்கோடுகளையும் என்கிரிப்ட் செய்து சேமித்து வைத்துக்கொள்ள TITAN M என்ற புதிய சிப் ஒன்றை, புதிய மாடல்களின் பிராசஸிங் லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் தங்களது டேட்டாக்களைப் பாதுகாத்து வைக்கப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை என்பதால், கூகிள் மொபைல்கள் அதிநவீன தளத்தை ஸ்மார்ட்ஃபோன் உலகில் எட்டியிருக்கின்றன என்கின்றனர். அத்துடன், கூகிள் மொபைல்களின் பையோமெட்ரிக் (Fingerprint Scanner) சென்சார்கள் அதிவேகமானவை என்ற கூற்றையும் முன்வைக்கின்றனர். இதுவரை வெளியாகியுள்ள ஸ்மார்ட்ஃபோன்களில் பிக்சல் 3 மற்றும் 3 XL மாடல்கள் அளவுக்கு வேகமாக பயோமெட்ரிக் சென்சார்களை இயக்கும் மொபைல்கள் இதுவரை இல்லை என்கின்றனர்.

இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது?

ஏன் நம்ப முடியாது என்கிற கேள்வி முக்கியமானது. தான் கண்டுபிடித்து இவ்வுலகத்துக்குக் கொடையளித்த ஆண்ட்ராய்டு சாஃப்ட்வேரை வைத்து எத்தனையோ நிறுவனங்கள் சம்பாதிக்கும்போது, நாம் வாளாவிருப்பானேன் என்று களமிறங்கியது கூகிள். அப்படிப்பட்ட நிலையில் தன் ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே மற்றவற்றுக்கும் சாஃப்ட்வேர்களை உருவாக்குமா கூகிள் என்று யோசித்தால் புரியும்.

ஒரு மனிதரின் மூளை எந்தளவுக்கு வேகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு உடலும் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நினைத்ததை செய்து முடிக்க முடியும். உதாரணத்துக்கு, சாலையைக் கடக்கும் வயதானவரை நினைத்துக்கொள்ளுங்கள். தூரத்தில், குறிப்பிட்ட வேகத்தில் வரும் வாகனத்தைக் கண்டு சாலையைக் கணிக்கும் நேரத்தைக் கணக்கிடுவார். ஆனால், மூளை செயல்பட்ட வேகத்துக்கு கால்களும், உடலும் ஒத்துழைக்கவில்லை என்றால் அவரது கணக்கு தப்பாகி அசம்பாவிதம் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் மற்ற ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்க, கூகிளின் ஸ்மார்ட்ஃபோன்கள் எந்த சிறப்பம்சங்களைத் தயாரிக்கிறதோ அதற்கேற்றாற்போல தனது சாஃப்ட்வேரின் திறனையும் மெருகேற்றுகிறார்கள்.

அது எப்படி?

கூகிளின் பிக்சல் 3 மற்றும் 3 XL ஸ்மார்ட்ஃபோன்களில் Visual Core என்ற புதிய பிராசஸிங் யூனிட் அமைக்கப்பட்டிருக்கிறது. பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களின் கேமரா இயக்கப்படும்போது, இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் குவால்கம் ஸ்னேப்டிரேகன் 845 பிராசஸர் மட்டுமின்றி, இந்த விஷுவல் கோர் பிராசஸரும் இயங்கத் தொடங்கும். இது கேமராவின் திறனைப் பல மடங்கு அதிகரிப்பதுடன் அது செய்ய வேண்டிய தனிப் பெரும்பான்மைச் செயல்களையும் திறம்படச் செய்யும். இந்த விஷுவல் கோர் இயங்கும்போதுதான், பிக்சல் மூன்றாம் தலைமுறையும் கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கும் பல வசதிகளைத் திறம்படப் பயன்படுத்த முடியும்.

PHOTOBOOTH என்ற புதிய வசதியின் மூலம், செல்ஃபி எடுக்கும்போது ஸ்மார்ட்ஃபோனை க்ளிக் செய்யவோ, தொட்டு ஃபோட்டோ எடுக்கவோ வேண்டியதில்லை. சாதாரணமான ஒரு புன்னகை தோன்றினாலே தானாக ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் வசதி இணைக்கப்பட்டிருக்கிறது.

TOP SHOT என்ற வசதியின் மூலம் ஒரு ஃபோட்டோ எடுத்த சமயத்தில் இருந்த அத்தனை Frameகளையும் சேமித்து, அதில் எந்த Frame சிறப்பாக வந்திருக்கிறது என்று பார்த்து, தானே சேமிக்கப்படும்.

மேலே குறிப்பிட்டிருந்தது போல, Wide Angle Selfie வசதியின் மூலம் எவ்வளவு பெரிய Landscape படங்களையும் இவற்றில் எடுக்க முடியும். ஐஃபோன் கேமராவில் எடுப்பதைவிட 184% விரிவான படத்தை இதில் எடுக்கலாம் என கூகிள் அறிவுறுத்துகிறது.

மேலே உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய விஷுவல் கோர் என்ற பிராசஸர் அதிவேக செயல்திறனுடன் பயன்பட்டாலும், அதில் தேவையான முடிவினை எடுப்பது கூகிள் அசிஸ்டண்ட் எனப்படும் கூகிளின் சாஃப்ட்வேர். இப்படித்தான் கூகிள் தன்னை இம்முறை நிரூபித்திருக்கிறது.

கூகிள் பிற்போக்குத்தனமானதா?

கூகிள், தான் ஒரு தலைமுறை அளவுக்குக் காலத்தால் பின்தங்கிவிடுவதை ஒருபோதும் விரும்பாது. அத்தகைய சூழல் வருவதையும் அனுமதிக்காது. அதற்காக அவசரப்பட்டு அடுத்த கட்டத்துக்கு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் நினைக்காது. மற்ற வசதிகளைத் தவிர்த்தாலும், Wireless Charging வசதியை புதிய மாடல்களில் கொண்டுவந்திருக்கிறது. அதற்காகவே, அதன் பின்புறத்தில் Glass Frame பயன்படுத்தியிருக்கிறது.

இப்படியாகத் தனது வளர்ச்சியை அவசரப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்ல கூகிள் எப்படி முயற்சிக்கவில்லையோ, அதுபோலவே மக்களும் புதிய பிக்சல் 3 மாடல்களை கண்டிப்பாக அப்கிரேடு செய்தாக வேண்டிய அவசியம் இல்லை என்பதே கூகிளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பெரும்பாலும், சாஃப்ட்வேர் அப்டேட்தான் என்றாகிவிட்டபோது, சில மாதங்களில் கூகிள் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 9 எனும் PIE வெர்ஷனை ரிலீஸ் செய்யும் வரை காத்திருந்து, அந்த அப்கிரேடு பழைய பிக்சல் 2 ஸ்மார்ட்ஃபோனிலோ அல்லது மற்ற ஸ்மார்ட்ஃபோனிலோ எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய்ந்துவிட்டு அறுபதாயிரத்துக்கும் மேலான பணத்தை செலவழிக்கத் துணியலாம்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon