மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

எட்டு வழிச் சாலை: உயர் நீதிமன்றம் அதிருப்தி!

எட்டு வழிச் சாலை: உயர் நீதிமன்றம் அதிருப்தி!

சென்னை - சேலம் 8 வழி சாலை அமைய உள்ள பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சிலரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை முதல் சேலம் வரை 277 கிமீ தொலைவிற்கு எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச் சாலை திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் இன்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தன. அப்போது, இத்திட்டத்திற்காக தர்மபுரியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சக்திவேல், சுந்தரம் ஆகியோரைக் கைது செய்யக் காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதும், அரசிடமிருந்து வலுக்கட்டாயமாகத் தகவல்களை பெற வேண்டி உள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்கு வருவதைத் தவிர வேறெதும் செய்வதில்லை எனவும், இந்த வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைத்துவிடலாம் எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், தர்மபுரியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதில் தமிழக அரசு சிலரைப் பாதுகாக்க நினைப்பது வருத்தமளிப்பதாகக் கூறினர்.

இந்தப் புகாரில் ஜாமீன் பெற்ற அரசு அதிகாரிகளின் ஜாமீனை நிராகரிக்கக் கோரிய மனுவை பாப்பிரெட்டிபட்டி மாவட்ட நீதிபதி ஏன் காலம் தாழ்த்திவருகிறார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தொடர்ந்து காலம் தாழ்த்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon