மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

வீசப்பட்ட குழந்தை: சிசிடிவி ஆதாரம் சேகரிப்பு!

வீசப்பட்ட குழந்தை: சிசிடிவி ஆதாரம் சேகரிப்பு!

பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, சென்னை காரம்பாக்கம் சுடுகாடு அருகே கண்டெடுக்கப்பட்டது. ஒரு ஆணும் பெண்ணும் இக்குழந்தையை வீசிச் சென்ற காட்சி, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் சுடுகாடு அருகே, நேற்று (அக்டோபர் 10) இரவு குழந்தை ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டது. சாலையோரம் உள்ள கால்வாயின் அருகே ஒரு குழந்தை கிடந்தது. அவ்வழியே சென்ற தனியார் நிறுவனக் காவலாளி ரவி, அந்த குழந்தையை மீட்டு ரோந்துப் பணியில் இருந்த வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். சின்ன போரூரில் உள்ள சுகாதார மையத்தில், அக்குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அக்குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

குழந்தையைப் புதரில் வீசியது யார் என்று வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், ஒரு பெண்ணும் ஆணும் சாலையில் அக்குழந்தையை வீசிச் செல்லும் காட்சியானது தெரிந்தது. இருவரும் கைலித் துணியால் குழந்தையைப் போர்த்தி, அதனை ஒரு பையில் வைத்து எடுத்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை வீசிவிட்டுச் சென்றது பெற்றோர்களா அல்லது அது கடத்தப்பட்ட குழந்தையா என்று பல கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, இதேபோன்று வளசரவாக்கம் பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலிலிருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon