மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பிகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!

பிகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கிச் செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று காலை பாட்னாவில் பாபு சப்கர் என்ற இடத்தில் நடைபெற்ற ஜனதாதள் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அவர் மேடையில் அமர்ந்திருந்த போது சாந்தன் குமார் திவாரி என்ற மாணவர் நிதிஷ் குமாரை நோக்கிச் செருப்பு ஒன்றை வீசினார். ஆனால் அந்த செருப்பானது அவர் மீது விழாமல் சற்று முன்னதாவே கீழே விழுந்தது.

இதைக் கண்ட போலீசார் செருப்பு வீசிய நபரை வளைத்துப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். சாந்தன் குமார் திவாரி அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சுவர்ன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சாந்தன் குமார் திவாரி, தான் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அரசின் இடஒதுக்கீடு காரணமாக வேலை பெற முடியவில்லை என்று கூறியுள்ளார். பிகாரில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே சலுகைகளை அளித்துவருவதாக உயர் சாதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த மாதம் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது பிகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது

பிரதமர் மோடி, ஓராண்டில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon