மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

பள்ளியில் மத ரீதியான பாகுபாடு!

பள்ளியில் மத ரீதியான பாகுபாடு!

டெல்லி மாநகராட்சிப் பள்ளியொன்றில் மாணவர்களை மத ரீதியில் தனித்தனியே பிரித்து வைத்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்த புகார்களைத் தொடர்ந்து, 'உரிய விசாரணை நடத்தப்படும்' என்று டெல்லி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளின் சார்பில், மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன. வாஜிராபாத்தில் உள்ள என்டிஎம்சி ஆண்கள் ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மதரீதியாகப் பிரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே இது குறித்துப் புகார் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான கட்டுரையொன்றில், இது குறித்துத் தகவல்கள் வெளியாகின. அதில் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்கள் இருப்பதாகப் புள்ளி விவரம் இடம்பெற்றிருந்தது.

முதலாம் வகுப்பு: ஏ: 36 இந்து மாணவர்கள், பி: 36 முஸ்லிம் மாணவர்கள்

இரண்டாம் வகுப்பு: ஏ: 47 இந்து மாணவர்கள், பி: 26 முஸ்லிம் மாணவர்கள் மற்றும் 15 இந்து மாணவர்கள், சி: 40 முஸ்லிம் மாணவர்கள்

மூன்றாம் வகுப்பு: ஏ: 40 இந்து மாணவர்கள், பி: 23 இந்து மாணவர்கள் மற்றும் 11 முஸ்லிம் மாணவர்கள், சி: 40 முஸ்லிம் மாணவர்கள், டி: 14 இந்து மாணவர்கள் மற்றும் 23 முஸ்லிம் மாணவர்கள்

நான்காம் வகுப்பு: ஏ: 40 இந்து மாணவர்கள், பி: 19 இந்து மாணவர்கள் மற்றும் 13 முஸ்லிம் மாணவர்கள், சி: 35 முஸ்லீம் மாணவர்கள், டி: 11 இந்து மாணவர்கள் மற்றும் 24 முஸ்லிம் மாணவர்கள்

ஐந்தாம் வகுப்பு: ஏ: 45 இந்து மாணவர்கள், பி: 49 இந்து மாணவர்கள், சி: 39 முஸ்லிம் மாணவர்கள் மற்றும் 2 இந்து மாணவர்கள் டி: 47 முஸ்லிம் மாணவர்கள்

ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே சிறந்த கல்வியைக் கொடுக்க முடியும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை மீறி, இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின், சி.பி.சிங் ஷெஹ்ராவத் என்பவர் அப்பள்ளியின் தற்காலிகத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் மேற்கொண்ட முடிவுகளால், இந்தப் பிரிவினை அமல்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர் இப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள்.

மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறைதான் என்று கூறியுள்ளார் சி.பி.சிங் ஷெஹ்ராவத். அதோடு, சிறு வயதில் மாணவர்களுக்கு மத வித்தியாசம் ஏதும் தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த முடிவு ஏற்கமுடியாதது என்று தெரிவித்துள்ளார் வடக்கு டெல்லி மாநகராட்சி ஆணையர். இங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், இதுபற்றிப் பெரிதாகப் புகார் ஏதும் எழுப்பவில்லை.

ஆனாலும், இந்த செய்தி மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 'பச்சைக் குழந்தைகளின் மனதில் மத ரீதியான பிரிவினையைத் திணிக்கக் கூடாது' என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையைக் கண்டறிய, என்டிஎம்சி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. “புகாருக்கு உள்ளான பள்ளியில் மூத்த கல்வி அதிகாரி விசாரணை நடத்த உள்ளார். புகாரில் கூறிய குற்றச்சாட்டு உண்மையெனில், இந்தப் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று டெல்லி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon