மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

2004 குண்டு வெடிப்பு: 19 பேருக்கு ஆயுள் தண்டனை!

2004 குண்டு வெடிப்பு: 19 பேருக்கு ஆயுள் தண்டனை!

2004 குண்டு வெடிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு ஆயுள் தண்டனையும், 19 பேருக்கு மரண தண்டனையும் விதித்து டாக்கா நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 10) தீர்ப்பு வழங்கியுள்ளது.

வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சி 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி டாக்காவில் பேரணி நடத்தியது. அப்போது அந்நாட்டுப் பிரதமராக கலீதா ஜியா இருந்தார். இந்தப் பேரணியின்போது, குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஷேக் ஹசீனா காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான், அப்போதைய உள்துறை அமைச்சர் லுத்போஸமான் மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் அப்துஸ் சலாம் பின்ட்டு உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. தாரிக் ரகுமானுக்கு குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.

குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு வங்கதேசத்தில் உள்ள டாக்கா நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று (அக்டோபர் 10) குற்றம்சாட்டப்பட்ட 49 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் உள்பட 19 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், முன்னாள் அமைச்சர்கள் லுத்போஸமான் மற்றும் அப்துஸ் சலாம் பின்ட்டு உள்ளிட்ட 19 பேருக்கு மரண தண்டனையும் வழங்கி நீதிபதி ஷாகித் நூருதீன் தீர்ப்பு வழங்கினார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தாரிக் ரகுமான் தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வங்கதேசம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாது ஜாமன் கான் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியா ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon