மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 10 அக் 2018

பாலியல் புகார்: வைரமுத்து பதில்!

பாலியல் புகார்: வைரமுத்து பதில்!

சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக வைரமுத்து பதிலளித்துள்ளார்.

முகம் தெரியாத பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய அது விவாதப்பொருளாக மாறியது. அதைத் தொடர்ந்து, வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்க முயன்றதாகத் தெரிவித்தார் பின்னணிப் பாடகி சின்மயி. இது குறித்து ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்துவைத் தொடர்புகொள்ள முயற்சித்தும், அவரது கருத்துக்களைப் பெற முடியவில்லை.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக சின்மயியின் தாய் பத்மாசினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “2004ஆம் ஆண்டு ‘வீழமாட்டோம்’ ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றோம். சுரேஷ் என்பவர் எங்களிடம் பேசினார். நிகழ்வு முடிந்த பின்னர் அனைவரும் நாடு திரும்பிய போது என்னையும் சின்மயியையும் மட்டும் இருக்கச் சொன்னார். லுஸார்ன் நகரைப் பார்க்கலாம் என்று கூறினார். ஏன் அவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்லலாமே எனக் கேட்ட போது, அவர்கள் ஏற்கெனவே பல முறை பார்த்துவிட்டனர்; நீங்கள் இருங்கள் எனக் கூறினார். நாங்களும் போனோம். ஆனால் அங்கு வைரமுத்து இருப்பது எங்களுக்கு தெரியாது. என்னை இருக்கச் சொல்லிவிட்டு ஹோட்டலில் வைரமுத்து இருப்பதாகக் கூறி சின்மயியை மட்டும் அழைத்தார். ஏன் இங்கே ஹோட்டலில் சந்திக்க வேண்டும், தொழில்ரீதியான பேச்சுவார்த்தைகளை ஊரில் பார்த்துக்கொள்ளலாமே எனச் சொன்னேன். அவர் வெளிப்படையாகவே, கொஞ்சம் அணுசரித்துப்போங்கள் என்றார். மிரட்டல் தொனியில் அவரது பேச்சு இருந்தது. அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இது மாதிரியான வேலைகளை வைத்துக்கொள்ள வேண்டாம். படிக்காத பெண் என நினைத்து பேசாதே என நான் கண்டிப்புடன் பேசினேன். எம்பசியை தொடர்பு கொள்ள வேண்டியது வரும் எனச் சொன்னேன். அதன் பின்னர் தான் எங்களது டிக்கெட்டுகளை கொடுத்தார்கள்" எனத் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்கள் மூலமாக பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்தப் பிரச்சினை குறித்து வைரமுத்து முதன்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இன்று (அக்டோபர் 10) மதியம் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டை ரீ-ட்விட் செய்துள்ள சின்மயி பொய்யர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஊடகங்கள் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon