மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

நமக்குள் ஒருத்தி: லிலித் எனும் தேவதை!

நமக்குள் ஒருத்தி: லிலித் எனும் தேவதை!

நவீனா

பெண்ணியம் பேசும்போது 'லிலித்' என்கிற புராணக் கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசாமல் நகர்ந்து செல்ல முடியாது. முன்னொரு காலத்தில் இறைவன் உலகை உண்டாக்கி முடித்த பின் அதன் அழகினை ஆள்வதற்காக மனித இனத்தைப் படைக்க எண்ணினார். முதலில் பெண் என்ற பாலினத்தைப் படைக்கிறார். அவளுக்கு 'லிலித்' என்று பெயரிடுகிறார். பின் ஆதாமைப் படைக்கிறார்.

ஆனால் 'லிலித்' யாருக்கும் அடங்க மறுத்து, கணவன் ஆதாமை எதிர்த்துக் கேள்வி கேட்பவளாக, சுய சிந்தனை உடையவளாகத் தென்படுகிறாள். அதனால் கடவுள் அவளை அழித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை, ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார். அவளுக்கு ஏவாள் எனப் பெயரிட்டு சாந்த ஸ்வரூபியாக, அன்பின் அடையாளமாக வலம்வரச் செய்கிறார். ஆனால், கடவுளால் அழிக்கப்பட்ட லிலித் சாத்தான்களின் தேவதையாகி இன்றளவும் மனித உடல் உறவின்போது சிதறும் விந்துகளைச் சேகரித்து அதிலிருந்து, கடவுளைத் தோற்கடிக்க தனக்கான ஒரு படையை திரட்டிக் கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

எலிசபெத் பேரட் பிரவுனிங் (Elizabeth Barrett Browning) முதல் பல மேற்கத்திய எழுத்தாளர்கள் தொடங்கி, மதன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் வரை லிலித் பற்றிய விவரங்களைத் தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். பின்னாளில் கத்தோலிக்க மன்னர்கள் காலத்தில் பைபிள் தொகுக்கப்பட்டபோது லிலித் பற்றிய குறிப்புகள் பைபிளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உண்மையில் 'லிலித்'தான் பெண்ணியவாதிகளின் தாய் என்று சொல்ல வேண்டும். ஒரு பெண்ணிடம் இருக்கும் சுதந்திர எண்ணங்கள் அவளை உருவாக்கிய கடவுளுக்கேகூட ஒரு வித பயத்தைத் தரவல்லதாக இருந்திருக்க வேண்டும். பெண் என்பவள் சக்தியின் ஊற்று. அதனால் தானோ என்னவோ சமூகம் அவளது மறுபக்கத்தை முற்றிலும் இருட்டடிப்பு செய்து, அவளுக்கு வேறு ஒரு முகத்தை உருவாக்கிவிட எண்ணுகிறது. அவள் குரலை ஒடுக்க நினைக்கிறது. அவள் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தித் தன் அதிகாரத்தின் கீழ் வைக்க முற்படுகிறது. அவள் கவனத்தை ஆக்கபூர்வமான விஷயங்களிலிருந்தும், சூழல்களிலிருந்தும் விலக்கி வைக்கப் பார்க்கிறது.

அழகு என்னும் தளை

அதனடிப்படையில் 'அழகு' என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கி, அதைப் பெண் என்கிற பாலினத்தோடு முழுவதுமாகப் பிணைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது. இயற்கையில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும், ஆண் பெண்ணைவிட அழகாகத் தோன்றும்படியாக ஏதோ ஒரு கூடுதலான அம்சம் தரப்பட்டு, பெண்ணினத்தைத் தன்பால் ஈர்க்க அதைப் பயன்படுத்தி வருவதற்கான அமைப்பு இருக்கிறது. ஆனால், மனிதப் பிறவியில் மட்டும் அழகு என்பதைப் பெண்ணோடு பொருத்தி, அதற்காகப் பெண் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிடும்படி செய்து, அவளின் ஆக்க சக்தியைச் சமூகம் வீணடித்து வருகிறது.

இவ்வாறு திணிக்கப்பட்ட கருத்துகளின் மேல் பெண்களுக்கு இருக்கும் நம்பிக்கை அபரிமிதமானது. சமூகம் அவர்களிடம் எடுத்துக் கொடுத்த ஒரு நூலினைப் பிடித்துக்கொண்டு அதன் மேல் பல முடிச்சுகளைப் போட்டு இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். அழகு என்கிற வார்த்தையோடு நிறம், உடலின் வடிவம், எடை போன்ற பல பரிமாணங்களை இணைத்து அதற்கு முழு உருவம் கொடுத்துவிட்டனர்.

முன்பெல்லாம் மூன்று வேளையும் சரிவிகித உணவு உண்ணும் வசதியற்ற வீடுகளில் உள்ள பெண்களிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை, இப்போது நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு வர்க்கப் பெண்களிடமும் அதிக அளவில் காண முடிகிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதற்காகப் பெண்கள் உணவை முற்றிலும் தவிர்த்துவிட்டு 'புரோட்டீன் ஷேக்' போன்ற பானங்களை குடித்து, உடற்பயிற்சி நிலையங்களே கதி என்று இருந்து மாரடைப்பால் இறந்து போவதும் நம் கண்முன்னே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் பரிதாபம் நிகழ்வதைத் தடுப்பதற்காகச் சில நாடுகளில் பெண்களுக்கு ஜீரோ சைஸ் என்பதையே முற்றிலுமாகத் தடை செய்திருக்கிறார்கள்.

ஆங்கிலக் கவிதை ஒன்றில், புன்னகை என்பது கண்களில் தொடங்கி இதழ்களில் முடிய வேண்டும் என்பார்கள். உண்மையில் அழகு என்பது ஆரோக்கியத்தில் தொடங்கி, வெளித் தோற்றத்தில் வந்து முடிய வேண்டும். பெண்கள் உடல் எடை பற்றிக் கவலை கொள்ளத் தேவையே இல்லை என்று கூற வரவில்லை. தனது எடையும், தோற்றமும் எவ்வளவு அல்லது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பெண்களின் சார்பில் சமூகம் தீர்மானித்துக் கொண்டிருப்பதை மாற்ற முயல வேண்டும்.

பெண்கள் அழகுக்கு மதிப்பளித்துவிட்டு ஆரோக்கியத்தை மறந்துவிடுவதே இங்கு பெரிய பிரச்சினை. நிறம், உடல் எடையின் பொருட்டு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து பெண்கள் முற்றிலும் வெளிவர வேண்டும். மார்கரெட் அட்வுட் அவர்களின் 'எடிபிள் உமன்' என்கிற நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கும் பெண் கதாபாத்திரம் உணவு உண்பதையே முற்றிலுமாக தவிர்த்துவருவதாகப் புனையப்பட்டிருக்கும். அவ்வாறு அவள் முற்றிலுமாக உணவு உண்பதைத் தவிர்த்து வருவதால் ஏற்படும் ஒருவித மன இறுக்கமும், மன அழுத்தமும் அவளை மனநோயாளியாக்கும் கட்டத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவளின் பசி உச்சக்கட்டத்தை அடைந்து, தன் காதலனுக்காகத் தான் பராமரித்துவரும் மெலிந்த தோற்றத்தின் மீதும், தனது காதலன் மீதும் அதீத வெறுப்பு உண்டாகி அவனை விட்டு விலக முடிவு செய்துவிடுவாள். ஒரு கட்டத்தில் தனது வெறுப்பைக் காட்ட அவள் தனது காதலனின் உருவம் போல் ஒரு கேக் செய்து அதைத் தின்று தன் வெறுப்பைத் தீர்த்துக் கொள்வது போல் அந்த நாவல் முற்றுப்பெறும்.

தனக்குப் பிடிக்காத எந்த ஒரு காரியத்தைச் செய்யும்போதும் அதை யாருக்காக செய்கிறோமோ அவர்கள் மேல் வெறுப்பு வருவது உளவியல்ரீதியாக இயற்கையான விஷயம்தான். அது மேலும் ஆண் பெண் உறவுச் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெண்கள் தங்களுக்குப் பிடிக்காத எதையும் தங்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே செய்யும்போது சமூகப் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகுமே தவிரக் குறைவதற்கு வாய்ப்பில்லை.

பெண்கள் தன் வெளித் தோற்றத்திற்காக உணவைத் தியாகம் செய்யாமல் பிடித்த உணவை உண்பது அவர்களை உளவியல் ரீதியாகப் பல மன அழுத்தங்களிலிருந்து வெளிக் கொண்டுவர உதவும். அவர்கள் உறவுச் சிக்கல்களையும் குறைக்கும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்தபடைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

ஆறாம் பகுதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வெள்ளி, 5 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon