மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

இங்கிலாந்தை வீழ்த்த இலங்கை போடும் திட்டம்!

இங்கிலாந்தை வீழ்த்த இலங்கை போடும் திட்டம்!

டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை, இளம் படையைக் கொண்டு வெல்ல இலங்கை அணி ஆயத்தமாகி வருகிறது.

இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள், 1 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடர் வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என வீழ்த்திய கையோடு இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளதால் அந்த அணியின் நம்பிக்கை பிரகாசமாக உள்ளது. இருப்பினும் சென்ற தொடருடன் அந்த அணியின் தொடக்க வீரர் அலெஸ்டர் குக் ஓய்வு பெற்று விட்டதால் இம்முறை புதிய வீரர்களைக் கொண்டு தொடங்க முயற்சிக்கும். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை விரைவில் வெளியேற்ற முயற்சிப்போம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஎஸ்பிஎன் க்ரிக் இன்ஃபோ ஊடகத்திற்குப் பேட்டியளித்த சங்கக்காரா, "இலங்கை அணிக்கு இது சவாலான தொடராக இருக்கும். இங்கிலாந்து அணியினர் எல்லா சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். அனைத்து துறையிலும் பலம் வாய்ந்த இங்கிலாந்து, உலகின் தலைசிறந்த அணி என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அங்கு 10ஆம் நிலை வீரர் வரை பேட்டிங் செய்யக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். தற்போது அலெஸ்டர் குக்கின் ஓய்வையடுத்து அந்த அணி புதிய வீரர்களைக் கொண்டு துவங்க முயற்சிக்கும். அவர்களை இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை உண்டாக்க இலங்கை முயற்சிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு குறித்துப் பேசிய சங்கக்காரா, "அடில் ரஷீத், மொயீன் அலி ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். இலங்கை மண்ணில் ரஷீத்தை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் திறன் வாய்ந்தவர்கள்" என்று கூறியுள்ளார்.

புதன், 3 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon