மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

மதுரையில் முதல்கட்ட வெற்றி!

மதுரையில் முதல்கட்ட வெற்றி!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாகவும், இதில் பின்னடைவு ஏதும் இல்லை என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் 3 ஆண்டுகள் ஆன பின்னும் எய்ம்ஸ் மருத்துவனை அமையவுள்ள இடம் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த ஜூன் மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்தன.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ’எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து, இதற்கான நிலம், மின்சாரம், நான்கு வழிச்சாலை, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுவரப் பணிகளைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட தோப்பூரில் அமைச்சர்கள் ஆய்வும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை; நிதி ஒதுக்கவில்லை; கட்டுமானம் தொடர்பாக எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தகவல் தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்தத் தடையும் இல்லை என்று தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, மதுரையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தேர்வு, மண் பரிசோதனை, மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகளை நிறைவேற்றியது என்று முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்ட வெற்றியையும் பெறுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

செவ்வாய், 2 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon