மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

அதிமுகவுக்குப் போட்டியாக ‘சர்கார்’?

அதிமுகவுக்குப் போட்டியாக ‘சர்கார்’?

விஜய் நடிக்கும் சர்கார் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் சர்கார். அக்டோபர் 2ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டுவிட்டது. சிம்டாங்காரன் எனத் தொடங்கும் அந்தப் பாடல் தற்போது இணையத்தில் கலவையான விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில் இதிலிருந்து இரண்டாவது பாடல் நேற்று (செப்டம்பர் 30) வெளியாகியுள்ளது.

'ஒருவிரல் புரட்சியே' எனத் தொடங்கும் இந்தப் பாடலை விவேக் எழுத, இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம்பெற்று வருகிறது. ஏ. ஆர்.ரஹ்மானுடன் ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இதைப் பாடியுள்ளார்.

முன்னதாக இதன் சிங்கிள் ட்ராக் வெளியிட்டபோது அதுகுறித்து படக்குழு சார்பாக முன்கூட்டியே தொடர்ச்சியாகப் பல அறிவிப்புகள் வந்தன. ஆனால், இந்தப் பாடலுக்குப் பெரிய அளவிலான எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் முடிவுடன் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரவலாகக் கூறப்படுகிறது. இந்த நகர்வுதான் தற்போது புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அதாவது, அதிமுக சார்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நேற்று நடந்தது. அதேபோல அந்த நாளில்தான் தனது அரசியலை ஆழப்படுத்த, தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளிலும் பங்கேற்றார் கமல்.

அரசியல் முக்கியத்துவம் கொண்ட இந்த இரு நிகழ்வுகளும் பெருத்த கவனம் பெறும் எனும் காரணத்தால்தான் அதே நாளில் போட்டியாக அரசியலை மையப்படுத்திய பாடல் வெளியிடப்பட்டிருக்குமோ எனக் கருதத் தோன்றுகிறது. எது எப்படியோ சர்கார் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ஒரு வீக் எண்டு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஞாயிறு, 30 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon