மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஓய்வுக்குப் பிந்தைய பதவி: பார் கவுன்சில் கோரிக்கை!

ஓய்வுக்குப் பிந்தைய பதவி: பார் கவுன்சில் கோரிக்கை!

தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசுப் பணியை ஏற்க வேண்டாம் என தீபக் மிஸ்ராவுக்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

நீதிபதிகளாக உள்ளவர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப்படுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஏ.கே.கோயல் ஓய்வுபெற்ற ஒரு வாரத்தில் பசுமைத் தீர்ப்பாயத் தலைவராக கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். நீதிபதியாக இருந்தபோது, இந்த முறைக்கு ஏ.கே.கோயல் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா, அக்டோபர் 2ஆம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். இந்த நிலையில், இந்திய பார் கவுன்சில் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு நிர்வாகத்தில் உள்ள சில சக்தி வாய்ந்த நபர்கள், நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பின்னர் பதவி வழங்குவதாகக் கூறி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கின்றனர். இத்தகைய நீதிபதிகள் மீது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்.

பல நேரங்களில் ஊடக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளிலேயே நீதிமன்றம் நேரத்தை விரயம் செய்கிறது. 99 சதவிகிதக் குடிமக்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக எந்த அக்கறையும் கிடையாது. நமது நீதிபதிகள், கள நிலவரம் மற்றும் பொதுமக்கள் எண்ணங்களில் இருந்து விலகியே இருக்கிறார்கள் என்பதைப் போல் உள்ளது இத்தகைய செயல்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “ஜனநாயக மாண்பு மற்றும் நீதித் துறையில் சுதந்திரத்திற்கான போராட்டத்தில், தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு நீண்ட அனுபவம் உண்டு. நீதித் துறையைச் சார்ந்தவர்கள், அவரிடம் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். தனது தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் மூலம், நீதித் துறை சுதந்திரத்திற்காகப் பெரிய போராட்டம் நடத்தியவர், புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுப்பார் என நம்புகிறோம். ஓய்வுக்குப்பின் அரசு வழங்கும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வரரின் முடிவைத் தலைமை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு, அதற்குப் புதிய அர்த்தத்தையும், வடிவத்தையும் அளிப்பார் என நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம், அவர் ஜனநாயகத்திற்கும், நீதித் துறைக்கும் பெரிய சேவை செய்ய முடியும் எனக் கருதுகிறோம். ஓய்வுக்குப் பின் அரசு வழங்கும் பணியை ஏற்றால், எந்தவித காரணமும் இல்லாமல், அவரின் பணிக்காலத்தின் மீது செய்யப்பட்ட பணிகள் குறித்து கேள்வி எழுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்பதால், ஓய்வுபெற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை எந்த நீதிபதியும் அரசு வழங்கும் பணியை ஏற்கக்கூடாது என பார் கவுன்சில் எதிர்பார்க்கிறது” என்று கோரிக்கை வைத்துள்ளது.

செல்லமேஸ்வரைப் போலவே நீதிபதி குரியன் ஜோசப்பும் ஓய்வுக்குப் பின் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டேன் எனக் கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon