மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

அமெரிக்காவின் வளர்ச்சியால் இந்தியாவுக்கு நன்மை!

அமெரிக்காவின் வளர்ச்சியால் இந்தியாவுக்கு நன்மை!

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும் என்று அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சரக்குகள் அதிகளவில் சென்றடையும் மிகப்பெரிய இடமாக அமெரிக்கா உள்ளது. பல ஆண்டுகளாகவே இந்த வர்த்தகம் வளர்ச்சிப் பாதையில் பயணித்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிக வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி நம்பிக்கையளிப்பதாக இருப்பதாக அசோசேம் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 4.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சீனாவுடன் வர்த்தகப் போர் ஏற்பட்டிருந்தாலும்கூட, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிலான வளர்ச்சியை அமெரிக்கா எட்டியுள்ளது.

அசோசேம் அமைப்பின் அறிக்கையில், “2017-18ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த சரக்கு ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு 16 விழுக்காடு சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மட்டும் 303 பில்லியன் டாலராகும். மேலும் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13.42 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியாவுக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. ஆகையால், தற்போதைய வேகத்தில் அமெரிக்கா வளர்ச்சியடைந்தால், இந்தியாவின் ஏற்றுமதிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. பொறியியல் பொருட்கள், இரசாயனங்கள், நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து அதிகளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon