மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

விஜய் சேதுபதி வீசிய அரசியல் வெடிகுண்டு!

விஜய் சேதுபதி வீசிய அரசியல் வெடிகுண்டு!

மெட்ராஸ் எண்டர்டெயினர் சார்பில் நந்தகோபால் தயாரித்திருக்கும் திரைப்படம் 96. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 29) சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, நாயகி த்ரிஷா மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 1996ஆம் ஆண்டு மேல்நிலை கல்வி முடித்த இருவருக்கிடையில் ஏற்படும் காதல் சம்பந்தபட்ட திரைக்கதை தான் 96 படம் என்றார் இயக்குநர் பிரேம்.

படம் சம்பந்தபட்ட கேள்விகள் மட்டும் கேட்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டபோது இடைமறித்த விஜய் சேதுபதி என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என அதிரடியாகக் கூறினார். நேற்று (செப்டம்பர் 28) காலையில் இருந்து விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை என்ற செய்தி ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது. இன்று காலை நாளிதழ்களிலும் இச்செய்தி முக்கிய இடம் பிடித்திருந்தது.

இது சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோது அதனை தனக்கே உரிய பாணியில் நக்கல் நையாண்டியுடன் எதிர்கொண்டு பதில் கூறினார் விஐய்சேதுபதி. “உண்மையில் அது வருமான வரி துறையினர் சோதனை இல்லை, சர்வே என்கின்றனர். அப்படி என்றால் என்னவென்று எனக்கு தெரியவில்லை” என்ற விஜய் சேதுபதியிடம் இதனால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படாதா என்றபோது “தமிழ் நாட்டில் இப்போது புது ட்ரெண்ட் உருவாகி வருகிறது எதை பற்றி வேண்டுமானாலும் ஏட்டிக்கு போட்டியாக இஷ்டப்படி பேசலாம் அது பிரச்சினைக்குரியதாகிவிட்டால் நான் பேசவில்லை அது என் அட்மின் பேசியிருக்கிறார், மிமிக்ரி செய்யப்பட்டது என கூறி சமாளித்து விடுகின்றனர். என் வீட்டில் சோதனை நடந்ததாக வந்த செய்தியும் அது போன்றுதான். என் வீடு, அலுவலகம் போன்று செட் போடப்பட்டு சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என கருதுகிறேன்” என்றார் விஜய் சேதுபதி.

மேலும் “இங்கு நல்ல விஷயங்களை பேசினால் பிரபலமாக முடியவில்லை. தவறான செய்திகள் என்னை பற்றி வெளியாகும் போது பரபரப்பாக எந்த செலவும் இன்றி மக்களை சென்றடைகிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது” என்றார் விஜய் சேதுபதி.

சினிமா சம்பந்தபட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்படம் சம்பந்தபட்ட கேள்விகளுக்கு பதில் கூறவே நடிகர்கள் தயங்குவார்கள், தடுமாறுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக வளர்ந்து விட்ட விஜய் சேதுபதி தன் சம்பந்தமான சர்ச்சைக்குரிய கேள்விகளை அரசியல்வாதிபோல், சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பதில் கூறுவது தமிழ் கதாநாயகர்கள் எவரும் இதுவரை கையாளாத பாணி என்றே கூறலாம்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon