மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

ஆந்திராவில் வோட்டர் ஐ.டி.: சிக்கலில் எம்.எல்.ஏ.!

ஆந்திராவில் வோட்டர் ஐ.டி.: சிக்கலில் எம்.எல்.ஏ.!

ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக எம்.எல்.ஏ. சத்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது.

தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அதிமுகவைச் சேர்ந்த சத்யநாராயணா உள்ளார். சென்னையில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ள நிலையில், ஆந்திராவின் திருப்பதியில் சத்யா வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இது தொடர்பாக மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதியே கூறியிருந்தோம்.

இந்நிலையில், ஆந்திராவில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள சத்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 17ன் படி எந்தவொரு குடிமகனும் தன்பெயரை, ஒன்றிற்கு மேற்பட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் அது சட்டப்படி குற்றமாகும். இதனை அறிந்திருந்தும் எம்.எல்.ஏ. சத்யநாராயணா தமிழகத்தில் இரு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார். அட்டை எண்கள் IOR 1522374, LMG4367306.

தமிழகத்தில் இரு இடங்களில் பெயர் சேர்த்ததுடன் ஆந்திரா மாநிலம் திருப்பதி தொகுதியிலும் தன் பெயரை மூன்றாவதாக சேர்த்துள்ளார். அட்டை எண்” AYM2119387. திருப்பதி தாசில்தார் இதனை உறுதி செய்துள்ளார். எம்.எல்.ஏ. சத்யநாராயணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 20ஆம் தேதி புகார் மனு அனுப்பியுள்ளோம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon