மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

வாகனங்களை அனுப்பச் சொல்லி கல்லூரிகளை மிரட்டுவதா?

வாகனங்களை  அனுப்பச் சொல்லி கல்லூரிகளை மிரட்டுவதா?

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வாகனங்களை அனுப்பும்படி கல்லூரிகளை மிரட்டுவதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை மறுநாள் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 7 லட்சம் பேர் கலந்துகொள்ள சென்னை வருவார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில் ஆட்களைச் சென்னைக்கு அழைத்து வருவதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அவற்றின் வாகனங்களைத் தர வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காகத் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அவற்றின் வாகனங்களைத் தர வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் அவற்றின் மாணவர்களையும் சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மூலம் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதை மதித்து மாணவர்கள் மற்றும் வாகனங்களை அனுப்பி வைக்காத கல்வி நிறுவனங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயரதிகாரிகள் நேரடியாகவே எச்சரித்திருக்கின்றனர். வாகனங்களுக்கான எரிபொருளையும் கல்வி நிறுவனங்களே நிரப்பித் தர வேண்டும்; இல்லாவிட்டால் கல்வி நிறுவன வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களைச் சென்னை விழாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மாணவர்களின் படிப்பை கடுமையாகப் பாதிக்கும் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். .

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே, விழாக்களுக்குக் கூட்டம் சேர்க்க மாணவர்களை அழைத்துச் செல்வது தான் வாடிக்கையாகவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எம்.ஜி.ஆர் விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு தடை விதித்தது. ஆனால், அதற்குப் பிறகும் சாதாரண உடைகளில் மாணவர்களை அழைத்துச் செல்வதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாக்கி விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர். தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி கல்லூரியின் திடல் சிதைக்கப்பட்டது. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, கோவையில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி சாலையில் சாய்ந்த ரகு என்ற மாணவர் பின்னால் வந்த வாகனம் மோதி உயிரிழந்தார். இவ்வளவு இழப்புகளுடன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த ஆட்சியாளர்களின் ஆட்டத்திற்கு விரைவில் நீதிமன்றம் முடிவு கட்டும்; தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon