மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் பாய்ச்சல் - மாஜி அமைச்சர்களைக் குறிவைக்கும் ஐஜி!

டிஜிட்டல் திண்ணை:  ஸ்டாலின் பாய்ச்சல் - மாஜி அமைச்சர்களைக்  குறிவைக்கும் ஐஜி!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். தயாராக இருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

”நேற்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து வந்த அறிக்கை நினைவிருக்கலாம். அதில் சில பகுதிகளை மட்டும் இங்கே சொல்கிறேன். அதன் பிறகு மற்ற விவரங்களைச் சொல்கிறேன்.

‘பணியாற்றும் அலுவலகத்திலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் மீது, அதன் கடுமையான தன்மை கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமையை மறந்து மனசாட்சி உறுத்தல் கடுகளவும் இன்றி ஒய்யாரமாகக் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும், புகாருக்குள்ளான ஐ.ஜி. மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அந்த அதிகாரியைக் காப்பாற்றிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பாலியல் புகாருக்குள்ளான ஐ.ஜி. . முருகனை, பிரதி உபகாரம் செய்திடும் வகையில், பாதுகாக்கும் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் ஆட்சி செய்வது, ஒட்டுமொத்த பெண்ணினத்தின் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் பணியிடப் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக மாறியிருக்கிறது. புகாருக்குள்ளான ஐ.ஜி. உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று ‘விசாகா கமிட்டி’ வழிகாட்டுதல் இருந்தும், அவர் அங்கேயே இருப்பதுதான், தன்மீதுள்ள ஊழல் வழக்குகளில் சாதகமான அறிக்கையைப் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று, இன்று வரை மாற்றப்படவில்லை. இதன் மூலம், முதலமைச்சர் காவல் துறையில் உள்ள பெண்களுக்கு விடுக்கும் செய்தி என்ன? இனி மேல் பெண் போலீஸார் பாலியல் புகார் கொடுத்தால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத அநீதியை இழைத்து, அதற்கு மேலும் அந்தப் பெண் அதிகாரி பழிவாங்கப்படுவார் என்பது தானா?

ஒருவருக்கொருவர் சரணாகதி ஒப்பந்தம் போட்டு, அந்த ஐ.ஜிக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சல்யூட் அடித்து நிற்பது, அமைச்சரவைக்கே என்றும் மாறாத அவமானம் என்பதுடன், தமிழகக் காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐ.ஜி. முருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கிருந்து மாற்றப்பட வேண்டும் என்றும், சிபிசிஐடியில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஐ.ஜி. கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” - ஐ.ஜி. முருகனுக்கு எதிராக இப்படி ஒரு காட்டமான அறிக்கை ஸ்டாலினிடம் இருந்து வந்தது. இந்த அறிக்கை போலீஸ் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு, விவாதிக்கப்பட்டிருக்கிறது. சிக்கலில் சிக்கியிருக்கும் ஐ.ஜி. முருகன் கூடுதலாகவே சூடாகிவிட்டாராம். அதே கோபத்துடன் நேற்று முதல்வர் எடப்பாடியுடன் பேசியிருக்கிறார் முருகன்.

’என் மேல ஆரம்பத்துல இருந்தே அவருக்கு கோபம் இருக்கு. நான் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறேன்னு அவரு நினைக்கிறாரு. அந்த கோபத்தில்தான் இப்படி ஒரு அறிக்கையை விட்டுருக்காரு. திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் மீது ஊழல் புகார்கள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட பல புகார்கள் இன்னும் அப்படியே கிடக்கிறது. அதை எல்லாம் தூசு தட்டி எடுத்து விசாரணையை தொடங்க வேண்டும். ’ என்று அனுமதி கேட்டிருக்கிறார்.

அதற்கு எடப்பாடி, ‘ தாராளமாக விசாரணையை தொடங்குங்க. புகார்களில் உண்மை இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுங்க. இதுல சிக்கல் எதுவும் வராமல் பார்த்துக்கோங்க. நடவடிக்கை எடுக்கக் கூடிய நபர் மீது புகாருக்கான ஆதாரங்கள் சரியாக இருக்க வேண்டும். முதல்ல வழக்குப் பதிவு செய்யலாம். தேவைப்படும் பட்சத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கான வேலைகளை முழுவீச்சில் தொடங்கிவிட்டாராம் முருகன். எந்த நேரத்திலும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதுடன் கைது நடவடிக்கையும் இருக்கலாம் என்று சொல்கிறார்கள் காவல் துறை வட்டாரத்தில்.

இந்தத் தகவல்கள் அத்தனையும் ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘கைது செஞ்சுதான் பார்க்கட்டுமே... அத்தனயும் பழிவாங்கும் நடவடிக்கை என்பது அப்பட்டமாகத் தெரியும். அவங்க எது செஞ்சாலுமே அது நமக்குதான் ப்ளஸ் ஆக முடியும். அதானால் கவலைப்படத் தேவை இல்லை’ என்று ஸ்டாலின் சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆனால், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில்தான் இருக்கிறார்களாம்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றைத் தட்டியது வாட்ஸ் அப்.

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மீண்டும் காலநீட்டிப்பு கேட்க முடிவு செய்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான அரசாணையும் செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. முதலாவதாக மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில் மேலும் ஆறு மாதம், அதான் பின் நான்கு மாதம் என கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியிருக்கிறது.

அதன் அடிப்படையில் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது வரை 103 பேரிடம் விசாரணையை நடத்தி முடித்திருக்கிறார். இதில் பல பேரிடம் மறு விசாரணையும் நடைபெற்றுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையையும் செய்து முடித்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவதாக வழங்கப்பட்ட 4 மாத கால நீட்டிப்பானது வரும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்ளாக விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துவிடலாம் என்ற அடிப்படையில் விசாரணையை ஆணையம் தீவிரமாக நடத்தி வந்தது.

இருப்பினும் , உயர் அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, உள்ளிட்ட பலரை விசாரணை செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் கால நீட்டிப்பு முடிவடையும் நிலையில் மேலும் மூன்று காலத்திற்கு அரசிடம் கால நீட்டிப்பு கேட்கலாம் என ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என்பதால் அதற்கான கோரிக்கை கடிதத்தை விரைவில் ஆணையம் அனுப்ப உள்ளது.

ஆணையத்துக்கு அவகாசம் மேலும் வழங்கப்படும் பட்சத்தில் ஆணையத்தின் விசாரணைக்கு எப்படியாவது துணை முதல்வர் பன்னீரை இழுத்து விட வேண்டும் என தினகரன் தரப்பு தீவிரமாக இருக்கிறது.” என்று முடிந்தது மெசேஜ். அதை காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வெள்ளி, 28 செப் 2018

அடுத்ததுchevronRight icon