மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வந்தார் தமிழிசை, பாய்ந்தது குண்டாஸ்!

வந்தார் தமிழிசை, பாய்ந்தது குண்டாஸ்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வீச்சு, தடியடி சம்பவங்களும் நடந்தன. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் கரைக்கப்பட்டன.

இதை ஒட்டி இரு தரப்பில் இருந்தும் இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செங்கோட்டை செல்வதற்காக நெல்லை வந்தார். ஆனால் அவருக்கு செங்கோட்டை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ஆலங்குளத்திலேயே ஆர்பாட்டம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட இந்து பெண்களோடு உரையாடினார். இந்த நிலையில் இன்று செங்கோட்டை கலவரம் தொடர்பாக குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்டிஐபி கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த செப்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பெயரால் முஸ்லிம்களின் சொத்துக்களை நாசம் செய்தும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகள் மற்றும் கடைகள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் வன்முறை கும்பல். இந்த கலவர தாக்குதல் காவல்துறையின் அலட்சியப் போக்கினாலும், காவல்துறையின் கண் முன்னாலும் நிகழ்த்தப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

அனுமதி பெறாமல் இந்துமுன்னணி நடத்தப்போகும் அந்த ஊர்வலத்தை தடை செய்து, போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் டி.எஸ்.பி. மற்றும் உள்ளூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல அனுமதி பெறாத ஊர்வலம் நடத்தி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களின் சொத்துக்கள் மீது தாக்குதலை நடத்தியது இந்து முன்னணி வன்முறை கும்பல். தாக்குதல் நடந்த சமயம் காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடி நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளவில்லை. இருதரப்பு கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரே காவல்துறை வருகை தந்து, மீண்டும் அனுமதி பெறாத அந்த ஊர்வலத்தை தொடரச்செய்தது.

அப்போதும் ஊர்வலம் செல்லும் பாதைகளில் கண்ணில் தென்பட்ட முஸ்லிம்களின் வாகனங்கள், கடைகள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட கடைகள், 16 வாகனங்கள், அமைப்புகளின் கொடிக்கம்பங்கள், வீடுகள் என சுமார் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட கடையநல்லூர் தொகுதி நிர்வாகிகளான அச்சன்புதூர் கனி, தென்காசி செய்யது மகமூத், வடகரை அப்துல் பாசித் ஆகியோரை இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை சிறையிலடைத்துள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை மெத்தனப்போக்கு காட்டாமல் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றும், கடந்தகால நிகழ்வுகளை கொண்டும், அனுமதி பெறாத அந்த ஊர்வலத்தை தடுத்தும், பலத்த பாதுகாப்பினையும் அளித்திருந்தால் செங்கோட்டை வன்முறை கலவரம் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், தங்களின் தவற்றை மறைக்கவும், தாங்கள் நடுநிலை தவறாமல் விசாரணை நடத்துகின்றோம் என்பதை காட்டவும் இருதரப்பு கைது, இரு தரப்பு குண்டர் தடுப்புச் சட்டம் என காவல்துறை அநீதியாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது.

இதன்மூலம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக மக்களுக்கு மென்மேலும் காவல்துறை அநீதி இழைத்து வருகின்றது. குற்றவாளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஒரேதட்டில் நிறுத்தும் காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார் முபாரக்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon