மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

நிகழ்களம்: புரட்சி நாடும் அமைதிப் பயணம்!

நிகழ்களம்: புரட்சி நாடும் அமைதிப் பயணம்!

ர.ரஞ்சிதா

அமைதிக்கான உரையாடல் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் என்னும் பயணத்தைக் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டு வருகிறார்கள் சில பெண்கள். செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணம் வரும் அக்டோபர் 13ஆம் தேதியன்று டெல்லியில் நிறைவடைகிறது.

இந்தியா முழுவதும் ஐந்து முனைகளிலிருந்து பெண்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில் மொத்தம் 125 பேர் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, அசாம், காஷ்மீர், டெல்லி என இந்தியாவின் ஐந்து முனைப் பயணங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்களும் ஒரு திருநங்கையும் பயணிக்கிறார்கள். இந்தியா முழுவதும் சுமார் 500 மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் இணைந்து இந்தப் பரப்புரைப் பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 25 மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணைந்து தமிழகத்தில் அமைதிக்கான பயணம் நடைபெற உறுதுணையாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இருக்கும் 17 பேர் கொண்ட தென்முனைக் குழுவின் பெயர், ‘ஒற்றுமை’ (இந்தியில் ஏக்தா). ஒற்றுமை என்னும் இந்தக் குழுவில் இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசுபவர்களும் இருக்கிறார்கள். கன்னியாகுமரி, மதுரை, திருத்துறைப்பூண்டி, சென்னை, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் இக்குழுவின் சார்பில் நடத்தப்பட்டன.

சென்னை அடையாற்றில் உள்ள டி.என்.ராஜரத்தினம் அரங்கில் ‘அமைதிக்கான உரையாடல் நிகழ்ச்சி’ கடந்த 25ஆம் தேதி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 27) வேலூரில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உரைகளும் கலை நிகழ்ச்சிகளுமாக நடந்த இந்த நிகழ்ச்சி இன்று நாட்டில் உள்ள நிலவரம் குறித்த பெண்களின் எதிர்வினைகளைக் கருத்துகளின் வடிவிலும் கலை வடிவிலும் முன்வைத்தது.

சகோதரித்துவத்துடன் இணையுங்கள்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முனைவர் வசந்தி தேவி, “இந்திய ஜனநாயக நாட்டில் ஒரு மனிதனுக்குக் கருத்துரிமையும் பேச்சுரிமையும் மறுக்கப்படுகின்றன. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் தைரியம் இல்லாத அரசு, கருத்துகளைக் கூறுபவர் மீதும், இதை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீதும் கறுப்புச் சட்டத்தை ஏவி அடக்குகிறது” என்ற கருத்தை முன்வைத்தார். “நாட்டில் பெண்கள், குழந்தைகள், தலித், சிறுபான்மையினர் மீதான வன்முறைத் தாக்குதல் அதிகமாக நடைபெறுகிறது. அடிமட்டத்திலிருக்கும் பெண்கள் பாலியல் ரீதியாகவும் அடிமைப்படுத்தப்படுவதாலும் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நாட்டில் நடக்கும் எண்ணற்ற வன்முறைகளை நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இல்லை, சகோதரித்துவத்துடன் இணைந்து தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

விடுதலை நாடும் கலை

அடுத்துக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இசையை மரணத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொதுப்புத்தியின் மீதான விமர்சனமாக வெளிப்பட்டது புத்தர் கலைக்குழுவின் பறை இசை. “சாவுக்கான இசை இல்லை இது வாழ்வுக்கான இசை” என்று கூறிய அக்குழுவினர், இசையுடன் நடனமும் ஆடினார்கள். பறை இசைக்கேற்ப கரகோஷங்களும், விசில்களும் அரங்கமெங்கும் பறந்தன.

"தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று கற்றுக்கொடுக்கப்படும் பள்ளியிலேயே தற்போது தீண்டாமை பார்க்கப்படுகிறது” என்று கூறி, சத்துணவு ஊழியர் பாப்பம்மாளின் கதையை விளக்கும் அருமையான நாடகத்தை அரங்கத்தில் நிகழ்த்தினர் கட்டியங்காரி நாடகக்குழுவினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான வ.கீதா, “வன்முறையற்ற இந்தியாவை உருவாக்குவதில் அக்கறையுடைய பெண்ணியச் சிந்தனையாளர்களும் ஜனநாயக சிந்தனையாளர்களும் இந்த மோசமான அரசைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்திய அரசை எவ்வாறு ஜனநாயகமான அரசாகவும், மக்களின் இறையாண்மை அரசாங்கமாகவும் மாற்ற முடியும் என்ற கேள்வியை நம்முள் கேட்டுக்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.

பாஜக அரசும், பெண்களின் நிலையும்

இந்தப் பயணத்தின் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் பத்மாவதி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் பாஜக அரசில் அதிகரித்து வருகின்றன எனத் தன் உரையில் குறிப்பிட்டார். "கத்துவாவில் எட்டு வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளைக் கைது செய்யக் கூடாது என ‘இந்து ஏக்தா மஞ்ச்’ எனும் சங் பரிவாரின் அமைப்பு போராட்டங்களை நடத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில் பாஜக அமைச்சர்கள் இருவர் கலந்துகொண்டனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், உன்னாவ் நகரில் பாஜக அரசின் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை பற்றி 17 வயதுச் சிறுமி அளித்த புகாரைக் காவல் துறையினர் ஏற்கவில்லை. இதையடுத்து அச்சிறுமியின் தந்தையை சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களும் தாக்கினார்கள். காவல் துறையினர் சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர். அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு சிறுமியின் தந்தை கடுமையான காயங்கள் காரணமாக மருத்துவமனையில் இறந்துபோனார். பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பெண்களைத் தூக்கி வந்து உங்களுக்குக் கட்டிவைப்பேன் என்று கூறியுள்ளார்" என்று பேசினார்.

‘இந்து மதவெறிக்கு அடையாளம் காவி’ என்ற பாடலைக் கலைக் குழுவினர் பாடி அசத்தினர்.

போராடுபவர்கள் மீது கறுப்புச் சட்டம்

பாஜகவின் கருத்துகளையும் பாஜக அரசின் செயல்களையும் விமர்சிக்கும் எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், முற்போக்காளர்கள் ஆகியோர் கொலை செய்யப்பட்டும், இந்த அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகின்றனர் என்பதைக் கூட்டத்தில் பலரும் சுட்டிக்காட்டினார்கள். கவுரி லங்கேஷ் படுகொலை, மனித உரிமைப் போராளிகளான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பத்திரிகையாளர் நவ்லகா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஆகியவையும் விமர்சிக்கப்பட்டன.

பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, அதன் உரிமையாளர்களின் வளர்ச்சிக்காகத் தமிழகத்தை மாற்றத் துடிக்கும் பாஜக அரசுக்கு முற்றிலும் சாதகமாக செயல்படுகிறது தமிழக அரசு என்னும் கருத்தும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. பாஜகவின் கடந்த நான்கு ஆண்டுக் கால ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்ற கருத்தையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அமைப்பினர் முன்வைத்தனர்.

போராளிக் கோடாரிகள்

“வன்முறையற்றதாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு வன்முறை எதனால் உருவாகிறது, யார் உருவாக்குகிறார்கள். யாருடைய நலனுக்காக இந்த வன்முறை உருவாக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் கவனிக்க வேண்டும். அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்காகவும், இவர்களுக்காகச் செயல்படும் அரசியல்வாதிகளுக்காகவும், சாதியைத் தூக்கிப் பிடித்து நின்றுகொண்டிருக்கும் பார்ப்பனியத்திற்காகவும்தான் இந்த வன்முறைகள் நிகழ்கின்றன” என்று கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா ஆவேசமாகப் பேசினார்.

பெண்கள் போராட வருவதே அரிதான விஷயம். அப்படி இருக்கும்போது வளர்மதி போன்ற பெண்கள் போராட வரும்போது, அவர்களைப் பாலியல் சீண்டல் செய்வது போன்ற வன்முறைகளில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர் என்று கூறிய பிரியா, “வளர்மதி, நந்தினி, என்னை மாதிரியான பெண்கள் மீது என்ன ரீதியிலான பாலியல் சீண்டல்களை செய்தாலும், ஏன் பாலியல் வன்புணர்வே செய்தாலும், எங்களுடைய போராட்டம் நிற்காது. ஏனென்றால் இந்துத்துவத்தை வேரறுக்க வந்த போராளிக் கோடாரிகள் நாங்கள்" என்று ஆவேசமாகக் கூறியபோது அரங்கம் முழுவதும் கைதட்டலால் அதிர்ந்தது.

பொருளாதார நிதியுதவி

“இந்தியா முழுக்க பரப்புரைப் பயணங்கள் மேற்கொள்வதற்கான பொருளாதார உதவிகளை ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு தருவதாகக் கூறியது. சில அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்த உதவியை அவர்களால் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. பெரிய நெருக்கடிக்கு ஆளான சமயத்தில் வங்கிகளில் லோன் எடுத்து, அந்தந்த மாநிலத்தில் உள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளித்துவருகிறோம். பல்வேறு மாநிலங்களில் உள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்தச் செலவைச் சமாளித்துவருகிறோம்” என்கிறார் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த ஜீவசுந்தரி.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர்களும் எங்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு இலவசமாக நிகழ்த்திக்கொடுத்துள்ளனர் என்றும் ஜீவசுந்தரி குறிப்பிடுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கத்தில் உள்ளவர்களிடம் நிதியுதவி கேட்டும், நன்கொடைகள் கேட்டும் இந்த நிகழ்ச்சியை நடத்திவருகிறோம் என்று தெரிவிக்கும் அவர், “வன்முறையற்ற இந்தியாவை உருவாக்கப் பெரும் தடைகளையும் இடர்களையும் தாண்டி இந்தப் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார்.

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon