மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

கருணாஸ்: ஒரு வழக்கில் காவல்!

கருணாஸ்: ஒரு வழக்கில்  காவல்!

ஐபிஎல் போராட்டம் தொடர்பாக கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வரையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்திருந்த, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கருணாஸ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை தரப்பிலிருந்தும் மனு அளிக்கப்பட்டது. காவல் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்றம், கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது ரசிகர்களை தாக்கியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கருணாஸ் மீதும் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ரசிகர்களை தாக்கியது, காவல் துறையினரை அச்சுறுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக கொலை முயற்சி வழக்கும், தடையை மீறி மைதானத்தை முற்றுகையிட முயன்றதாக ஓர் வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் வேலூர் சிறையில் கருணாஸை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பான தகவல் நேற்று எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், கருணாஸை ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து சென்னை அல்லிக்குளத்தில் அமைந்துள்ள சென்னை எழும்பூர் பெருநகர 13வது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோபிநாத் முன்பு, இன்று (செப்டம்பர் 27) கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பில் இரு வழக்குகளிலும் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க அனுமதி கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை முயற்சி வழக்கின் கீழ் நீதிமன்ற காவல் விதிக்க மறுத்துவிட்டார். சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் என்ற பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் அக்டோபர் 4ஆம் தேதி வரை, கருணாஸை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே கருணாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றுவருகிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon