மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

சிம்புவுக்கு வந்த சோதனை!

சிம்புவுக்கு வந்த சோதனை!

நடிகர் சிம்பு, தனக்குத் தர வேண்டிய நஷ்டஈடு தொகையைத் திரும்பத் தரும் வரை எந்தப் படங்களிலும் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்துக்குப் பின் பெரிய அளவில் வெற்றி தராத நடிகர் சிம்பு, தற்போது நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதேபோல் அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டான படப்பிடிப்பு தளத்துக்குச் சரியாக வராமல் இருத்தல், இயக்குநருக்கு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறார் போன்றவற்றை தகர்த்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் , மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச்சிவந்த வானம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், வெங்கட் பிரபு, நரேன் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படங்கள் என அடுத்தடுத்து பிசியாக இருக்கும் சிம்புவுக்கு, யார் கண் பட்டதோ... மீண்டும் கெட்ட பெயர் வாங்கும் வகையில் பழைய பிரச்சினை ஒன்று வந்து நிற்கிறது.

2017ஆம் ஆண்டு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். சிம்பு நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சரியாக சிம்பு ஒத்துழைப்பு தரவில்லை என்று மைக்கேல் ராயப்பன், அந்தச் சமயத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டமானது எனக் கூறியிருந்தார். மேலும், 60 நாட்களுக்கான கால்ஷீட்டில் 27 நாட்கள் மட்டுமே நடித்துக்கொடுத்தாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மைக்கேல் மறுபடியும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “என் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காமல் சிம்பு எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது. சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நம்பி இருக்கிறேன். இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வியாழன், 20 செப் 2018

chevronLeft iconமுந்தையது