மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

பிஎஸ்என்எல் வழக்கு: அக். 4இல் விசாரணை தொடக்கம்!

பிஎஸ்என்எல் வழக்கு: அக். 4இல் விசாரணை தொடக்கம்!

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடங்கும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்.லின் அதி விரைவு தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.1.75 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, தயாநிதி மாறன், அவரது தனிச் செயலர் கவுதமன், கலாநிதி மாறன், சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய ஏழு பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும்,கடந்த மார்ச் மாதம் விசாரணை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரது விடுதலையையும் ரத்து செய்ததுடன், மீண்டும் விசாரணை நீதிமன்றம் வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கக் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்து வரும், சென்னை 14 வது சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.வசந்தி முன்பு, ஆகஸ்ட் 30ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இவ்வழக்கில் வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில், தங்கள் மீதான சிபிஐ குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இம்மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon