மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ரஹ்மான் தேடும் சூப்பர் சிங்கர்!

ரஹ்மான் தேடும் சூப்பர் சிங்கர்!

அடுத்த நட்சத்திரப் பாடகரை தேடிவருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விருதுகள் பெற்று உலகளவில் பிரபலமாகியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார். உலகின் முக்கிய நகரங்களில் இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். தற்போது இசைக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆனால் வெளி உலகிற்குத் தெரியாதவர்களை கவனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அந்தந்த பகுதிகளின் இசையை வளர்த்துவருபவர்களைச் சந்தித்து அவர்களது இசை அனுபவத்தையும் கருவிகள் பற்றியும் கேட்டறிந்தார். ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தலைப்பில் இந்தப் பயணம் அமேசான் தொடரில் வெளிவருகிறது.

தற்போது மற்றொரு முயற்சியாக யு டியூப் இணையதளத்துடன் இணைந்து சிறந்த குரல்வளம் உள்ளவர்களைத் தேர்வு செய்து பிரம்மாண்ட மேடை அமைத்துக்கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு இசையில் பேரார்வம் இருக்கிறதா? இருந்தால், நீங்கள் மேடை ஏறுவதற்கான தருணம் இது. யு டியூப் தளமும் நானும் அடுத்த நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தெரிவிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செக்க சிவந்த வானம், சர்கார், 2.O, சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளிவரவுள்ளன.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon