மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

இந்தி இல்லாமல் நாடு முன்னேற முடியாது!

இந்தி இல்லாமல் நாடு முன்னேற முடியாது!

ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்தி மொழி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிகாரபூர்வ அலுவல் மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ‘இந்தி திவஸ்’ தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 14) மத்திய உள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்தி திவஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது, “ஆங்கிலம் பிரிட்டிஷாரால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு நோய். நான் இளம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டேன். இந்தி மொழி இல்லாமல் முன்னேற முடியாது என்பதைப் பின்னர்தான் உணர்ந்துகொண்டேன். நான் டெல்லிக்கு வந்தபோது மிக மோசமான இந்தி மொழியில் தான் பேசினேன். ஆனால், அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்”என்றார்.

மேலும் “இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சீன பிரதமர் அவருடைய தாய் மொழியில் தான் பேசியுள்ளார். அதுபோல ஈரான் பிரதமர் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் அவருடைய தாய் மொழியில் தான் பேசியுள்ளார். யாரும் தங்களுடைய தாய் மொழியை ஒருபோதும் மறக்கக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஒன்றைக் கூறியுள்ளார், அதாவது இந்தி பேசும் மக்கள் தென்னிந்திய மொழி ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் தென்னிந்திய மக்கள் வட இந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். வங்கி மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர், ஆனால் அங்கு வருகின்ற மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள் மக்களின் மொழியில் பேசுங்கள்” என்றார்.

நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “இந்தி தேசத்தை ஒருங்கிணைக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்டவை இந்திக்கு ஊக்கமளிப்பதால் உலகம் முழுவதும் இந்தியின் மீது ஈர்ப்புள்ளது” என்றார். இந்நிகழ்வில், இந்தி மொழி வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் பங்களித்தவர்களுக்கு ராஜ் பாஷா விருது வழங்கப்பட்டது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon