மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

செங்கோட்டையில் மீண்டும் மோதல்!

செங்கோட்டையில் மீண்டும் மோதல்!

செங்கோட்டையில் மீண்டும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக, நாளை மாலை வரை அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இன்று அங்கு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நேற்று (செப்டம்பர் 13) செங்கோட்டையில் 38 விநாயகர் சிலைகள் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் பிரதிஷ்டை செய்வதற்காக மேலூர் பெரிய பள்ளிவாசல் தெரு வழியாகக் கொண்டுசெல்ல அனுமதி பெறப்பட்டிருந்தது. நேற்றிரவு 9.30 மணியளவில், விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அப்போது, அப்பகுதி மக்கள் சிலையைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல், பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தினர்.

செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் குறைந்த அளவில் போலீசார் பாதுகாப்புக்குச் சென்ற காரணத்தால், இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தினர் போலீசார். பின்பு, அதே தெருவழியாகச் சிலைகளை எடுத்துச் சென்று, வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்தனர்.

இதனையடுத்து, திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்லும்போது மீண்டும் அசம்பாவிதம் ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காக செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.

இதுகுறித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், செங்கோட்டைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா பகுதிகளில் நாளை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள மற்ற இடங்களில், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்படும். குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறினார்.

இந்த நிலையில், செங்கோட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். காவல் துறை வாகனமும், தனியார் பேக்கரி ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கல்வீச்சிலும் போலீசாரின் தடியடியிலும் சிலருக்குக் காயம் ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏராளமான போலீசாரின் பாதுகாப்புடன், அங்கு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சேலத்தில் வழக்குப் பதிவு

சேலம், வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வெங்கடாசலம் என்ற பூசாரியை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கினர். இதில், படுகாயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர் போலீசார். விக்னேஷ், சிவா, சந்தோஷ்குமார் ஆகியோர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon