மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

சிறப்புக் கட்டுரை: திரும்பி வரும் குப்பைகள்!

சிறப்புக் கட்டுரை: திரும்பி வரும் குப்பைகள்!

நரேஷ்

'டாடா சால்ட்', 'ஆசீர்வாத் சால்ட்' , 'அன்னபூர்ணா சால்ட்' என்று இந்தியாவின் எட்டு முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உப்பில் பிளாஸ்ட்டிக் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மும்பை ஐஐடியின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் உப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வின் மூலமாக ஒரு கிலோ உப்பில் 0.063 மி.கி அளவுக்கு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியா ஓராண்டுக்கு 2.6 கோடி மெட்ரிக் டன் உப்பை உற்பத்தி செய்கிறது. உலகிலேயே இந்தியர்கள்தான் தங்கள் உணவில் அதிக அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், உலக அளவில் ஒரு மனிதர் சராசரியாக ஐந்து கிராம் உப்பை உட்கொள்கிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியென்றால், ஒரு வருடத்திற்கு 1,825 கிராம் உப்பு. ஒரு கிலோ உப்பில் 0.063 மில்லி கிராம் பிளாஸ்டிக் இருக்கிறது என்றால், ஒரு வருடத்தில் ஒரு சராசரி மனிதர் உட்கொள்ளும் நுண்ணிய பிளாஸ்டிக் பொருள்களின் அளவு 0.117 மில்லி கிராம்கள்!

இந்த அளவிலான பிளாஸ்டிக்கை வருடந்தோறும் உட்கொள்வதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னவென்றே கணிக்க முடியாது என்றும் இதனால் உடலின் சுத்திகரிப்பு உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றில் கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கிறது அந்த ஆய்வு. அதுவும் இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களானது மறுபயன்பாட்டுக்கு ஆகாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள். மறுபயன்பாட்டுக்கே ஆகாது என்றால், நேரடியாக உட்கொள்ளப்படும்போது இவை என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

கடலில் இருக்கும் பிளாஸ்டிக் உப்பில் இருக்காதா..?

நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட உப்பின் ஆய்வு மாதிரிகளைச் சோதனை செய்ததில் அவற்றுள் PET, பாலிஎத்திலீன், ரோபிளாஸ்டிக் ஃபைபர்கள் போன்ற பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் 'PET' எனப்படும் பிளாஸ்டிக்குகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களில் இருப்பவை. பாலிஎத்திலீன் எனப்படுவது பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் இருப்பவை. நாம் பயன்படுத்தி தூக்கி எறிந்த குப்பைகள் மீண்டும் நம் உணவுக்குள்ளே எப்படி வந்து சேர்கின்றன?

ஒவ்வொரு நொடியும் ஒரு லாரி அளவுக்கான பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன. அப்படிக் கொட்டப்படும் குப்பைகளில் முக்கால்வாசி மேற்சொன்ன பிளாஸ்டிக் பாட்டில்களும், பிளாஸ்டிக் கவர் கழிவுகளும் ஆகும். இவை சிதைந்து சின்னச் சின்னத் துகள்களாக மாறிக் கடல்வாழ் உயிரினங்களின் உடலில் கலக்கின்றன. பிளாஸ்டிக் கவர்களில் சிக்கி ஆமைகள், மீன்கள் முதல் மிகப் பெரிய திமிங்கலங்கள் வரை உணவு உண்ண முடியாமல் இறந்து போகின்றன என்ற கதறலை நாம் கண்டிப்பாகக் கடந்து வந்திருப்போம். மனிதர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மனித இனம் இதை அலட்சியம் செய்தது. கடலில் இருக்கும் பிளாஸ்டிக் உணவிலும் உப்பிலும் மட்டும் எப்படி இல்லாமல் போகும்?

"கடலிலிருந்து பெறப்படும் உப்பில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபித்துள்ளன, தற்போது எங்களது ஆய்வும் அதை உறுதிப்படுத்துகிறது" என்கிறார் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் அம்ரிதான்ஷு ஸ்ரீவாஸ்தவ். இந்தப் பிரச்சினைக்குப் புவியியல் அறிவியல் அமைச்சகம் சொல்லியிருக்கும் தீர்வு என்ன தெரியுமா? கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலானவை ஆறுகள் மூலமாகவும், கழிமுகப் பகுதிகள் மூலமாகவுமே உள்ளே நுழைவதால், அந்தப் பகுதிகளில் இருக்கும் உப்பளங்கள் மற்றும் நிலங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்தத் திட்டமிடப்படுகிறதாம். மேலும் பல்வேறு 'Filtration process' மூலம் உணவிலும் உப்பிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதைத் தடுக்கமுடியும் என்றிருக்கிறது.

ஏதாவது அறிவியல் உதவியைப் பயன்படுத்தி மனிதர்கள் மட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்றால், அது நிச்சயமாக சாத்தியமாகாது. ஏனெனில், ஒரு விசை ஓர் இடத்திலிருந்து உருவாகிறதென்றால், உருவாகிய இடத்துக்கு ஓர் எதிர்வினையைக் கொடுக்காமல் அது பயணப்படுவதில்லை.

Bisphenol A (BPA) இல்லாத உடல் இல்லை

உப்பு வெறும் உதாரணம்தான். உப்பைப் போலவே ஒவ்வொரு பொருளிலும் உள்ள நச்சுத்தன்மையை விளக்கினால் உங்களால் ஒரு பிடி சோற்றைக்கூட உருப்படியாக உண்ண முடியாது. 'தி கார்டியன்' பத்திரிகையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரையொன்று இப்படிக் குறிப்பிட்டது: "அமெரிக்காவில் வசிக்கும் 80 சதவிகித இளைஞர்களின் உடலில் 'Bisphenol A (BPA)' எனப்படும் நார் புரதம் காணப்படுகிறது. இவை பிளாஸ்டிக் பொருட்களின் உதிரிப் பொருளாகும். நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கால் பேக் செய்யப்பட்டவை.உணவுகள், பானங்கள், மருத்துவ உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று அனைத்திலும் பிளாஸ்டிக் மயம். வெறும் 30 ஆண்டுகளில் நடந்த இந்த மாற்றம் அடுத்த 300 ஆண்டுகளுக்கு மனித இனத்தைக் கவலைகொள்ளச் செய்யும். இவற்றின் விளைவுகள் நாம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும்."

கேரள வெள்ள நிவாரணப் பணிகளின்போது அவ்வளவு பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், லட்சம் பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் என்று குப்பைகளாக வந்து குவிந்தன. நிச்சயமாக இவற்றைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்ச்சிவசப்பட்ட மனநிலை எது உண்மையான தேவை என்பதையே மறக்கச் செய்துவிட்டது. கேரள நீர்நிலைகளையும் அதன் வழிப்பாதைகளையும் அடைத்தது இதே பிளாஸ்டிக் குப்பைகள்தான். எந்தத் தனியார் தண்ணீர் நிறுவனம் கேரளாவின் முக்கிய நீர்நிலையைக் குத்தகைக்கு எடுத்துப் பாழ்படுத்தியதோ அதே நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்களால் நிவாரண முகாம்கள் நிரம்பி வழிந்தன. எதனால் வெள்ளம் ஏற்பட்டதோ அதனையே நிவாரணமாகக் கொடுப்பதை என்னவென்று சொல்ல?

தீர்வு எதில் இருக்கிறது?

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்பதெல்லாம் நிச்சயமான வதந்திதான். ஏனெனில் பிளாஸ்டிக்கிலிருந்து உணவு தயாரித்து விற்பதால் எந்தவித வணிகப் பயனும் இல்லை. ஆனால், அவற்றுக்கு நாம் காட்டிய அக்கறையையும் பதற்றத்தையும் கொஞ்சமாவது பிளாஸ்டிக் பயன்பாட்டின் பக்கம் காட்டியிருக்க வேண்டும்.

உண்மையான பிரச்சினை பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் இல்லை. உணவுக்காகத் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கிறது. இதுவரை செய்த வினைகளுக்கே நாம் இன்னும் பல ஆண்டுகளுக்கு விலை கொடுக்க வேண்டும். அதுவும் நம் குழந்தைகள்தான் அந்த விலையைக் கொடுக்கவிருக்கின்றன.

தீர்வு என்பது பிளாஸ்டிக்கை முழு முற்றாகத் தவிர்ப்பதில்தான் இருக்கிறது. இதற்காக நாம் நிறைய மெனக்கெட வேண்டும். எவ்வகையில் எல்லாம் பிளாஸ்டிக்கைத் தவிர்க்கலாம் என்பதற்கான தகவல்களும் மாற்று வழிகளும் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கலாம். பிளாஸ்டிக்கைத் தவிர்க்கச் சட்டமோ, சீர்திருத்தமோ தேவையில்லை. நாம் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்னும் எண்ணமும், எதிர்காலச் சந்ததியின் மீதான அக்கறையும் இருந்தால் போதும்.

பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்குச் சிறப்பான மாற்று வழிகள் உங்களிடம் இருக்கிறதென்றால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon