மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

இலக்கை அடைவோம்: விஜயகாந்த்

இலக்கை அடைவோம்: விஜயகாந்த்

தேமுதிக தொடங்கி 14ஆவது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், எதற்கும் அஞ்சாமல் இலக்கை அடைய வேண்டும் என, தமது தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிகவின் 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் விருகம்பாகத்தில் உள்ள தனது இல்லத்தில் ஏற்றிவைத்தார். பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் நேற்று (செப்டம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 14ஆம் தேதி தேமுதிக ஆரம்பித்து 14 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.

தேமுதிக தமிழக மக்களிடத்தில் பட்டிதொட்டி என்று அனைத்து இடங்களிலும் வேரூன்றி தழைத்தோங்கி இருக்கிறது என்றால் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடும், விசுவாசத்தோடும் பாடுபடும் லட்சக்கணக்கான உண்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் என்பதை நன்கு அறிவேன். தேமுதிக தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். உண்மையான கொள்கைக்காக லட்சியத்திற்காக கொண்ட பற்றின் காரணமாக தேமுதிகவில் உள்ள லட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்கிற நமது கொள்கைப்படி பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து தேமுதிக தொடக்க நாளில் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேமுதிகவின் 14 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon