மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

ரயில் விபத்தில் பலி: ரூ.8 லட்சம் இழப்பீடு!

ரயில் விபத்தில் பலி: ரூ.8 லட்சம் இழப்பீடு!

ரயில் விபத்தில் பலியான பயணியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கொன்றில், பலியானவர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் சீனிவாசன். சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்து இவர் பலியானார்.

இவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, ரயில்வே தீர்ப்பாயத்தில் இவரது குடும்பத்தினரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சீனிவாசன் ரயிலில் பயணம் செய்ததற்கு ஆதாரமாக டிக்கெட் ஏதும் இல்லாத காரணத்தினால் இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாசனின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முரளிதரன் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, விபத்தில் பலியாகும் பயணி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை, ரயில்வே நிர்வாகத்திற்குத் தான் உள்ளது என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் நீதிபதி. பாதிக்கப்பட்ட சீனிவாசனின் குடும்பத்தினருக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என ரயில்வே துறைக்கு உத்தரவிட்டார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon