மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

சபரிமலை: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

சபரிமலை: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

வரும் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு வரவுள்ள பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவசம்போர்டு நிர்வாகம்.

புரட்டாசி மாத பூஜைகளுக்காக வரும் 16ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த பெருமழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது வெள்ளத்தில் சிதைவுற்ற, பம்பைக் கரையோரம் அமைந்த உணவு விடுதிகள், ஆற்றுப்பாலம், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்தையும் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக, ஆற்றைக் கடக்க பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. 17ஆம் தேதி காலை 5 மணி முதல் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டு, தொடர்ச்சியாகச் சிறப்பு பூஜைகள் அடுத்த 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றிரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு திருநடை அடைக்கப்பட உள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாகவும், பராமரிப்புப் பணிகளாலும் பம்பை ஆற்றுப் பகுதி மற்றும் கோயிலை ஒட்டிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மூடப்பட்டு உள்ளன. “சபரிமலைக்கு வரும் பக்தர்கள் உணவு, குடிநீர் கொண்டு வர வேண்டும். காடுகளுக்குள் செல்லக்கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு போகக்கூடாது” என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தானத் தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். “சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் ஹில்டாப் மற்றும் திருவேணி பகுதிகளும் சேதம் அடைந்துள்ளன. பக்தர்களின் தனியார் வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்களின் தனியார் வாகனங்கள், நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon