மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

மல்லையா தப்பியோடியதில் மோடிக்கும் பங்கு? ராகுல்

மல்லையா தப்பியோடியதில் மோடிக்கும் பங்கு? ராகுல்

பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்றதில் பிரதமருக்கும் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், “நான் இந்தியாவிலிருந்து லண்டன் புறப்படும் முன்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்தேன். நிலைமையைச் சரி செய்ய முயற்சித்தேன்’’ என்று விஜய் மல்லையா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 13) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அருண் ஜெட்லியை சந்தித்து மல்லையா பேசியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மல்லையா என்ன பேசினார் என்பதை அருண் ஜெட்லி தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு அருண் ஜெட்லி மறுப்புத் தெரிவித்திருந்தார். மல்லையாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவினருக்கும், காங்கிரசுக்கும் இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, மல்லையா கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் ஒன்றை சிபிஐ. வெளியிட்டது. அதில், “மல்லையா வெளிநாட்டுக்கு செல்ல இருந்தால் பிடிக்க வேண்டும்“ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அந்த லுக்அவுட் நோட்டீஸ் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. அதில், “விஜய் மல்லையா வெளிநாடுகளுக்குச் சென்று வரும் தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவித்தால் போதும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்பி செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நீர்த்து போய் விட்டதாக பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்றதற்கு பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 14) தனது ட்விட்டர் பக்கத்தில், “மல்லையாவுக்கு விடுத்த லுக்அவுட் நோட்டீஸில் பிடியுங்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐ மாற்றியுள்ளது. இதன் மூலம் மல்லையா தப்பி செல்ல உதவி செய்துள்ளது. சிபிஐ என்பது பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸில் பிரதமரின் அனுமதி இல்லாமல் மாற்றம் செய்திருப்பது ஏற்கக்கூடியதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon