மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

குட்கா: மாதவ ராவுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு!

குட்கா: மாதவ ராவுக்கு  சிபிஐ காவல் நீட்டிப்பு!

குட்கா ஊழல் வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகியோரின் சிபிஐ காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவுத் துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கைதும் செய்தனர்.

ஐந்து பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி வரை இவர்களை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஐந்து பேரிடமும் நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதவ ராவை, குடோனுக்கே நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரின் இரு வங்கிக் கணக்குகளையும் முடக்கினர்.

சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், ஐந்து பேரும் இன்று (செப்டம்பர் 14) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணை முடியாததால், காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பிலிருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி திருநீலப் பிரசாத், இருவருக்கும் வரும் 17ஆம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மற்றொரு பங்குதாரரான உமா சங்கர் குப்தா, அதிகாரிகள் பாண்டியன்,செந்தில் முருகன் ஆகியோருக்கு வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

மாதவ ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான சென்னை அண்ணாமலை இன்டஸ்ட்ரீஸில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டன் கணக்கில் குட்கா மூலப்பொருட்களும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon