மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

பதில் மனுதாக்கலில் இழுத்தடிப்பு கூடாது!

பதில் மனுதாக்கலில் இழுத்தடிப்பு கூடாது!

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அரசு பதில் மனுதாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர், 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய நிலத்துக்கு பட்டா வழங்க அரசு அதிகாரிகள் மறுப்பதாகத் தனது மனுவில் இவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (செப்டம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீஜெயந்தி, இந்த வழக்கில் திருவள்ளூர் கோட்டாட்சியர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சார்பில் பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். பதில் மனுதாக்கல் செய்யாமல், அரசு அதிகாரிகள் வழக்கை இழுத்தடிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறினார்.

“உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில், அரசுத் தரப்பில் உரிய காலத்தில் பதில் மனுதாக்கல் செய்வதே கிடையாது. உரிய ஆவணங்களையும், பதில் மனுவையும் தாக்கல் செய்து வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளிடம் இல்லை.

அரசுத் தரப்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களும், பதில் மனுதாக்கல் செய்யாமல், வாய்தா வாங்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், வழக்குகள் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற செயல்களை ஏற்க முடியாது. தேவைப்படும் வழக்கில், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதைச் செய்யவில்லை என்றால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கடமையை அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதாகி விடும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதி 3ஏயின்படி, உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால், 3 மாதங்களுக்குள் எதிர்தரப்பு பதில் மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறது.

ஆனால், இந்த விதியை உயர் நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த விதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதேநேரம், இந்த விதி அமலுக்கு வந்தால்தான், வழக்கின் பதில் மனுவைக் காலதாமதம் இல்லாமல், 90 நாட்களுக்குள் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படும்.

அதனால், பதில் மனுதாக்கல் செய்ய கால அளவை நிர்ணயம் செய்து புதிய விதிகளை உருவாக்க வேண்டும். இது குறித்து உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சி.கண்ணப்பன் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon