மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

விவாகரத்து: தொழுநோயைக் காரணம் காட்ட முடியாது!

விவாகரத்து: தொழுநோயைக் காரணம் காட்ட முடியாது!

தொழுநோயைக் காரணம் காட்டி விவாகரத்து பெற முடியாது என்று வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொழுநோயைக் குணப்படுத்த முடியாத காலத்தில், தம்பதியர் இடையே விவாகரத்து பெற இந்நோயை ஒரு காரணமாகக் குறிப்பிடுவதற்குத் தனிப்பட்ட சட்டங்களில் வழி செய்யப்பட்டிருந்தது. தற்போது தீவிர மற்றும் நவீன மருத்துவத்தால் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்பதால், சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொழுநோயாளிகளுக்குப் பாரபட்சமான இந்த சட்டப்பிரிவு தொடர்கிறது. இதைத் தகர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14) தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொழுநோயைக் காரணமாகக் கூறி விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை இன்று அளித்துள்ளது. “இனி தொழுநோயைக் காரணம் காட்டி விவகாரத்து செய்ய முடியாது. இதோடு, பல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் தொழுநோய் பாதித்த குழந்தைகளைத் தனிமைப்படுத்தாமல், அவர்களையும் அனைத்துக் குழந்தைகளையும் போல சமமாக நடத்த வேண்டும். இதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழுநோயாளிகளின் நலனுக்காக இருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினர்.

தொழுநோயாளிகளும் மற்ற மக்களைப் போல சராசரியாக வாழ உரிமை படைத்தவர்கள் என்று கூறிய நீதிபதிகள், தொழுநோயாளிகளுக்குத் தனியாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவது குறித்து மத்திய அரசு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

தொழுநோயாளிகளுக்கு மருத்துவமனையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும், தொழுநோயாளிகளிடம் வேறுபாடு காட்டப்படவில்லை என்பதை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த நோயை முற்றிலும் ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon