மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர்!

உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர்!

இதோ ஆவணங்கள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதை உலக வங்கியின் ஆவணங்கள் காட்டுகின்றன.

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சாலைத் திட்டங்களைத் தமிழக முதல்வர், தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதில் 4,800 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக திமுக தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், புகார் மீதான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்துத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து அரசுத் தலைமை வழக்கறிஞர் வைத்த வாதத்தில், முதல்வரின் உறவினர்கள் 1991 முதல் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். “முதல்வரின் மகன் என்ற காரணத்திற்காக அவருக்கு அரசு ஒப்பந்தங்களைப் பெறத் தகுதி இல்லையா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், “உலக வங்கி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்குக் கூடுதல் தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை. இந்தப் பணிகள் உலக வங்கியின் கண்காணிப்பில் நடைபெறுகின்றன. எனவே மனுதரார் புகார் தவறானது” என்றும் குறிப்பிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நெடுஞ்சாலைத் திட்டங்களில் உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

வழக்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உலக வங்கி தனது கடன் திட்டங்களுக்கு என்னென்ன விதிமுறைகள் வகுத்துள்ளது என்பது பற்றி உலக வங்கியின் ஆவணங்களில் தேடினோம்.

உலக வங்கியின் ஊழல் தடுப்பு மற்றும் நடவடிக்கை தொடர்பான விதிமுறைகள் அதன் நான்காவது இணைப்பில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி உலக வங்கியின் நிபந்தனைகள் கடுமையாக இருக்கின்றன.

*உலக வங்கியானது தன்னிடம் கடன் பெறுபவர்கள், பெறும் அமைப்புகள், இதற்கு உதவும் ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள், துணை ஒப்பந்ததாரர்கள், துணை ஆலோசகர்கள், பொருள் வழங்குநர்கள், இந்தக் கடன் தொடர்பான தொழிலில் ஈடுபடும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத முகவர்கள் என அத்தனை பேரும் நெறிமுறைகளைப் பின்பற்றும் உயர்ந்த தரத்தோடு செயல்பட வேண்டும் என்பதை உறுதியாக எதிர்பார்க்கிறது.

*உலக வங்கியின் நிதி உதவி தொடர்பாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆஃபர் செய்தல், கேட்டல், பெற்றுக்கொள்ளுதல், முறைகேடான வகைகளில் செல்வாக்கு செலுத்துதல் போன்றவை கரெப்ட் ப்ராக்டிஸ் எனப்படும் ஊழல் புரியும் செயல்களாகக் கருதப்படும்.

மோசடி நடவடிக்கைகள்!

இந்தக் கடன் செயல்பாட்டில் தவறான பிரநிதித்துவப்படுத்துதல், தெரிந்தோ, பொறுப்பற்ற வகையிலோ தவறாக வழிநடத்துதல்,

ரகசிய நடவடிக்கைகள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்புகள் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு முறைகேடான வழியில் இலக்கு நிர்ணயிப்பது, அடுத்த தரப்பு மீது முறைகேடான வகையில் செல்வாக்கு செலுத்துவது

நிர்பந்தப்படுத்துதல்

நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னாருக்குதான் ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கக் கூடாது என்று மிரட்டுதல், பயமுறுத்துதல், எச்சரித்தல் ஆகியவை கூடாது.

தடை செய்யும் நடைமுறை

உலக வங்கியால் வழங்கப்படும் நிதி உதவிகளில் மேற்கண்ட ஊழல், மோசடி, ரகசிய, நிர்பந்தப்படுத்தும் நடவடிக்கைகள் இருப்பதாகப் புகார்கள் வரும் பட்சத்தில் புலனாய்வு செய்கையில் ஆவணங்களை அழித்தல், மாற்றுதல், பொய் கூறுதல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கிப் புலனாய்வில் குறுக்கிட்டால் நிதி உதவியைத் தடை செய்யலாம்.

உலக வங்கிக்கு இருக்கும் மேற்பார்வை அதிகாரம், தணிக்கை செய்பவற்றைத் தாமதப்படுத்திடல் கூடாது. அவ்வாறு செய்தாலும் நிதி உதவி பற்றி ஆய்வு செய்யப்படும்.

உலக வங்கி ஒரு முன்மொழிவை நிராகரிக்க முடியும்

உலக வங்கி ஒரு முன்மொழிவை நிராகரிக்க முடியும். எப்போது என்றால் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ தனது பணியாளர்கள், தனது முகவர்கள், தனது துணை ஒப்பந்தததாரர்கள், தனது ஆலோசகர்கள், தனது சேவை வழங்குநர்கள் போன்றவர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்பந்தம் வழங்கிட முன்மொழிந்தால், அது தொடர்பாக ஊழல், முறைகேடு, ரகசிய நடவடிக்கைகள், நிர்பந்தச் செயல்பாடுகள் இருப்பதாக உலக வங்கி கருதினால் அந்த முன்மொழிவை (proposal) நிராகரிக்க முடியும்.

இவ்வாறு மிகத் தெளிவாக உலக வங்கியின் நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு திட்டத்துக்கான முன்மொழிவைச் செய்பவருக்குத் தெரிந்தவர்கள்,நெருக்கமானவர்கள், சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கு அந்தத் திட்டம் ஒதுக்கப்படக் கூடாது என்று தெளிவாக வரையறுத்துள்ளது உலக வங்கி.

ஆனால் உயர் நீதிமன்றத்திலேயே அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், “முதல்வரின் உறவினர்கள் தொழில் செய்யக் கூடாதா?’’ என்று கேள்வி எழுப்பியது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோலவே அமைந்திருக்கிறது.

தமிழக அரசுக்கு உலக வங்கி வழங்கிய திட்டங்கள் தமிழக முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது உலக வங்கியின் ஊழல் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. இது உலக வங்கியின் விசாரணையில் தெரியவந்தால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருக்கிற ஒட்டுமொத்த திட்டங்களும் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இது ’உலக ஊழல்’ என வரையறுக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது!

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon