மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

விநாயகர் சதுர்த்தி: செங்கோட்டையில் மோதல்!

விநாயகர் சதுர்த்தி: செங்கோட்டையில் மோதல்!

விநாயகர் சதுர்த்தி நேற்று (செப்டம்பர் 13) நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், மின் கசிவினால் இரண்டு பேர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 34 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. செங்கோட்டை விநாயகர் குழுவினர், மேலூர் வழியாக விநாயகர் ஊர்வலத்தை எடுத்துச் சென்றபோது, அந்த பகுதியிலுள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியது. இரு தரப்பிலும் கற்களை வீசித் தாக்கினர். இதில், கடைகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர். செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த பெருமாபட்டைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் பிரதீப். இவர், அரசு ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் வசித்து வந்த பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அனுமதியின்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்றிரவு, 7.30 மணிக்கு, சிலை அருகே பிரதீப் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, மின்கம்பி அறுந்து விழுந்ததில், சிறுவன் பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதேபோன்று, ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் காலனியைச் சேர்ந்த இளம்பரிதி என்பவரின் மகன் அகத்தியன். இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு 8 மணிக்கு, விநாயகர் சிலைக்கு மின் விளக்குஅலங்காரம் செய்தபோது, தவறுதலாக மின் கம்பியை அகத்தியன் பிடித்தார். இதில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon