மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

லுக் அவுட் நோட்டீஸில் சந்தேகம்: சுப்ரமணியன் சாமி

லுக் அவுட் நோட்டீஸில் சந்தேகம்: சுப்ரமணியன் சாமி

விஜய் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார் தொழில் அதிபர் விஜய்மல்லையா. அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வரும் டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நாட்டை விட்டுச் செல்வதற்கு முன்பாக மத்திய நிதியமைச்சரைச் சந்தித்துவிட்டு சென்றதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளது நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சாமியும் மல்லையா வெளிநாடுக்கு செல்வதற்கு முன்பாக நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசினார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 13) தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரமணியன் சாமி சந்தேகம் கிளப்பியுள்ளார்.

இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள அவர், “லுக் ஆவுட் நோட்டீஸில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது என்று கடந்த ஆண்டில் இருந்தே நான் கூறிவருகிறேன். மல்லையா வெளிநாட்டுக்கு சென்றால் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலில் பிறப்பிக்கப்பட்ட சிபிஐ லுக் அவுட் நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. பின்னர் 2015 அக்டோபர் 24ஆம் தேதி, தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்குப் பதிலாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று லுக் அவுட் நோட்டீஸில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏன் இவ்வாறு மாற்றப்பட்டது, யாருடைய உத்தரவின்படி இந்த தளர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மல்லையா ஜேட்லியை சந்தித்தாரா இல்லையா என்பது எனக்கு தேவையில்லாது. மல்லையா நாட்டில் இருந்து தப்பிக்க முடிந்தது என்பதே முக்கியம். லுக் அவுட் நோட்டீஸில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுடன் இது தொடர்புடையதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon