மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

வெள்ள பாதிப்பு: இழப்பீடு கேட்கும் கேரளா!

வெள்ள பாதிப்பு: இழப்பீடு கேட்கும் கேரளா!

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர ரூ.4,700 கோடியை ஒன்றிய அரசிடம் இழப்பீடாகக் கேட்டுள்ளது கேரளா.

கேரளா கடந்த மாதத்தில் இந்த நூற்றாண்டில் காணாத அளவுக்கு மிகக் கடுமையான வெள்ள சேதத்துக்கு உள்ளானது. கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கொல்லம், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 488 பேர் இந்த வெள்ளத்துக்குப் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். இந்த வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர கேரளாவுக்கு பல்வேறு தனிநபர்களும், மாநில அரசுகளும், வெளிநாட்டினரும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மதிப்பிட்டு ரூ.4,700 கோடியை நிவாரண நிதியாக வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கேரளா கேட்டுள்ளது. இதுகுறித்து கேரள அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்பால் இழக்கப்பட்ட மனித வாழ்க்கை, சொத்துகள், உள்கட்டமைப்பு சேதங்கள் மற்றும் பயிர்கள் ஆகியவற்றைப் புதுப்பிக்க ஒன்றிய அரசிடம் ரூ.4,700 கோடி இழப்பீடாகக் கேட்டுள்ளோம். துறை வாரியாக எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக மதிப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.

ஒன்றிய அரசு கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடியை மட்டுமே முதலில் அறிவித்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுச் சென்றபிறகு ரூ.100 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon