மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்!

சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்!

தடையை மீறி மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைந்தது தொடர்பான வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16பேருக்கு மகாராஷ்டிராவின் கீழமை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் பகுதியிலுள்ள கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்லி அணையின் கட்டுமானப் பணிகளை கடந்த 2010ஆம் ஆண்டு அம்மாநில அரசு ஆரம்பித்தது. அணையினால் ஆந்திராவின் கடைமடை பகுதிகள் பாதிப்படையும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருங்கிணைந்த ஆந்திராவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு, தனது கட்சியினருடன் அணையினை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு, தற்போதைய நீர்வளத் துறை அமைச்சர் தேவினேனி உமா மகேஷ்வர ராவ், சமூக நலத் துறை அமைச்சர் ஆனந்த பாபு மற்றும் 40 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். இதில் சந்திரபாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

8 ஆண்டுகளாக இவ்வழக்கு மஹராஷ்டிரா மாநிலம் தர்மபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் சந்திரபாபு நாயுடு, நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, அவர்களை கைது செய்து வரும் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திர பாபு நாயுடு மகனும், ஆந்திர அமைச்சருமான நரலோகேஷ், “தெலுங்கானாவின் நலன்களை காப்பதற்காக சந்திரபாபு நாயுடு போராடினார். வழக்கு தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறிய பிறகு, நடக்கும் இந்த சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பது தெளிவாகக் காட்டுகிறது. மோடி, அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை குறிவைத்துள்ளனர்” என்று தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் லங்கா தினகர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon