மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

புழல் சிறையில் 18 டிவிகள் பறிமுதல்!

புழல் சிறையில் 18 டிவிகள் பறிமுதல்!

சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் அறைகளில் இருந்து 18 டிவிகள், 2 எஃப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசியாவில் மிகப்பெரிய சிறையாக இருந்துவருகிறது சென்னையிலுள்ள புழல் சிறை. இங்கு முறைகேடுகள் நடப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதும், அங்குள்ள கைதிகளுக்குத் தேவையான வசதிகளை சிறைத் துறை அதிகாரிகளே சட்டவிரோதமாகச் செய்து கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக, புழல் சிறையில் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும் வருகின்றனர்.

சென்னை புழல் சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகளுக்கான சிறை, தண்டனைக் கைதிகளுக்கான சிறை என ஆண்களுக்காக இரண்டு சிறைகள் உள்ளன. தண்டனைக் கைதிகளுக்கான சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவு என சிறப்புப் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவில், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள், கள்ள நோட்டு மற்றும் கள்ளத்துப்பாக்கி கடத்தி வந்த நபர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட தீவிரக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு சிறப்புப் பிரிவில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரது அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. சொகுசு விடுதியிலுள்ள அறைகளைப் போல டிவிகள், செல்போன்கள், சொகுசுப் படுக்கைகள், மின்விசிறி, நாற்காலி, புதிய உடைகள், ஷூ மற்றும் கூலிங் கிளாஸ், உயர் தர உணவுகள் என்று பல வசதிகள் அந்த அறையில் இடம்பெற்றிருந்தன. சிறை வளாகத்தினுள் அந்த கைதி எடுத்திருந்த புகைப்படமும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த வசதிகளை எல்லாம் செய்துகொடுத்த சிறைத் துறை அதிகாரிகள் யார் என்பது குறித்து, நேற்று தமிழக சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் டிஐஜி கனகராஜ் சென்னை புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அசுதோஷ் சுக்லா, இந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஒரு மாதத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

புழல் சிறையில் உயர் பாதுகாப்பு சிறப்புப் பிரிவில் உள்ள 24 அறைகளில், சிறைத் துறை அதிகாரி முருகேசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில் முதல் வகுப்பு அறைகளில் இருந்து, 18 டிவிக்கள், 2 ரேடியோக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைதிகளுக்கான சொகுசு வசதிகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய டிஐஜி முருகேசன், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தொலைக்காட்சிப் பெட்டிகள் உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகளின் அறைகளுக்கு எப்படிச் சென்றன, அவற்றைச் சிறைக்குள் கொண்டு செல்வதற்கு உடந்தையாக இருந்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர் சிறைத் துறை அதிகாரிகள். சிறை வளாகத்தினுள் செல்போன் ஜாமரைத் தாண்டி தகவல் தொடர்பு நீடித்து வந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon