மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 நவ 2019

அமெரிக்கச் சுற்றுலா: இந்தியா சறுக்கல்!

அமெரிக்கச் சுற்றுலா: இந்தியா சறுக்கல்!

கடந்த 8 ஆண்டுகளிலேயே முதன்முறையாக அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அமெரிக்க வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 2017ஆம் ஆண்டில் மொத்தம் 11.14 லட்சம் பேர் அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் மொத்தம் 11.72 லட்சம் பேர் அங்கு சென்றிருந்த நிலையில் 2017ஆம் ஆண்டில் 5 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படும் மிகப் பெரிய சரிவாகும். முன்னதாக 2009ஆம் ஆண்டில் 8 சதவிகித சரிவுடன் 5.5 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்ததே மிகப் பெரிய சரிவாக இருந்தது.

எனினும் இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமான ஒன்றுதான் எனவும், 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் அமெரிக்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கும் எனவும் அமெரிக்க தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் கணித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 முதல் 12 சதவிகிதம் வரையில் வளர்ச்சி கண்டிருந்ததாகவும், 2017ஆம் ஆண்டில் திடீர் சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரையில், 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு 7.7 கோடிப் பேர் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதாகவும், அவர்கள் அமெரிக்காவில் 251.4 பில்லியன் டாலருக்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon