மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக பொருளாளராக 2008ஆம் ஆண்டு ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், பொருளாளராக இருந்துவந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டார். உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவர் கலைஞர் காலமானதையடுத்து, தலைவர் பதவி காலியானது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் துரைமுருகன் வகித்துவந்த முதன்மைச் செயலாளர் பதவி, தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக சட்ட விதி: 17, பிரிவு: 3இன் படி திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு, தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பிறகு ஸ்டாலின், இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சராகவும், திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் திமுகவில் சென்னை மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்துள்ள அவர், கட்சி சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களுக்கு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon